தமிழக அரசால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் திட்டமிட்டபடி செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்படாது என்றும், இத்திட்ட தொடக்கம் தள்ளிப்போவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ல் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் லண்டன் பயணம் மேற்கொள்ள உள்ளதால், திட்டமிட்ட தேதியில் இத்திட்டத்தைத் தொடங்க முடியாமல் தள்ளிப்போவதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இத்திட்டத்தில் வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ள தங்க மோதிரங்கள் 100 சதவீதம் தரமானவை என்பதில் உறுதியாக இருக்கிறோம். அனைத்து மோதிரங்களிலும் ‘916 BIS Hallmark’ முத்திரை இடம்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யப்படாது” எனத் தெளிவுபடுத்தினார்.
திட்டம் தொடங்கப்படும் புதிய அதிகாரப்பூர்வ தேதி குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல, வரவிருக்கும் பருவமழையை முன்னிட்டு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை முழு கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிட்டார்.