கடந்த 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான செவிலியர் ஜுலி, தற்போது அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் வேலூரில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஜல்லிக்கட்டு காளை குறித்த ஒரு குட்டிக்கதையைச் சொல்லியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட ஜுலி, விஜய்யின் கட்சியில் இருப்பவர்கள் மைனர்கள் என்றும், ஜல்லிக்கட்டுக்காகப் போராட இனி திராணி இல்லை என்றும் விமர்சித்திருந்தார். இது த.வெ.க தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஜுலி திடீர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் எதிரே ‘Vote for DMK’ என்ற பதாகையுடனும், பெண்களின் பாதுகாப்பு குறித்து த.வெ.க-வினரை வம்பிழுக்கும் வகையிலான வாசகங்களுடனும் அவர் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்துத் தகவலறிந்த மெரினா போலீசார், தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ததற்காக ஜுலியை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் ஜுலியை எச்சரித்து அனுப்பி வைத்த போதிலும், அவர் மீண்டும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சவால் விடுக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஆறு முறை அனுமதி கோரியும் கிடைக்காததால் தான் மீண்டும் மெரினாவில் போராட்டம் நடத்தியதாகவும், போலீசார் தன்னை மிகவும் மரியாதையுடன் நடத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அம்பேத்கர் ஜெயந்தி அன்று ‘சிங்கிள் சிங்கமாக’ களமிறங்கியதாகக் கூறி, தன்னை மிரட்டியவர்கள் யாரும் நேரில் வரவில்லை என விஜய்யை மீண்டும் கடுமையாகச் சாடினார்.
தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டது மட்டுமன்றி, அடுத்த போராட்ட இடத்தையும் விரைவில் அறிவிப்பேன் என ஜுலி திமிராகப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. போலீஸ் எச்சரிக்கை விடுத்த பின்பும் ஜுலி இத்தகைய செயல்களில் ஈடுபடுவது சட்டத்தை அவமதிக்கும் செயல் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காவல்துறையினர் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற அத்துமீறல்கள் குறையும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.