Posted in

எப்ஸ்டீன் விவகாரத்தில் பில் கேட்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் : விசாரணையில் வெளிவந்த உண்மைகள்!

மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரருமான பில் கேட்ஸ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை கண்காணிப்புக் குழு (House Oversight Committee) முன்பாக  ஆஜராகி, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது உறவு குறித்து பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் உலகளவில் பெரும் புயலைக் கிளப்பியதைத் தொடர்ந்து, பில் கேட்ஸிடம் இந்த மூடிய அறை விசாரணை நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் கடுமையான கேள்விகளுக்குப் பதிலளித்த பில் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் பழகியது தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று ஒப்புக்கொண்டார். “நான் எப்ஸ்டீனைச் சந்தித்த ஒவ்வொரு நிமிடத்தையும் நினைத்து வருந்துகிறேன்; அவரோடு எனக்கு இருந்த தொடர்புக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எப்ஸ்டீனை நான் முதன்முதலில் சந்திக்கவே கூடாது” என்று அவர் தனது ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். உலகளாவிய சுகாதாரப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காகவே எப்ஸ்டீனைத் தான் பயன்படுத்த நினைத்ததாக அவர் மீண்டும் ஒருமுறை விளக்கமளித்தார்.

இருப்பினும், எப்ஸ்டீனின் சட்டவிரோத பாலியல் கடத்தல் தொழிலிலோ அல்லது அவரது தீவில் நடந்த குற்றங்களிலோ தனக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்றும், அவரது குற்றங்கள் எதுவும் தனக்குத் தெரியாது என்றும் பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.அதே நேரத்தில், எப்ஸ்டீன் ஆவணங்களில் கூறப்பட்டிருந்த இரண்டு ரஷ்யப் பெண்களுடனான தனது திருமணத்தை மீறிய உறவை
(Extramarital Affairs) பில் கேட்ஸ் நாடாளுமன்றக் குழுவிடம் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தனக்கு பாலியல் நோய் (STI) பரவியது போன்ற எப்ஸ்டீனின் மற்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் வாதாடியுள்ளார்.

கடந்த 2011 முதல் 2014 வரை எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸ் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் 2013-லேயே இதுகுறித்த தனது கடுமையான எச்சரிக்கையை விடுத்தும் பில் கேட்ஸ் அதனைக் கேட்காமல் தொடர்ந்ததுமே இவர்களது விவாகரத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பில் கேட்ஸ் அளித்துள்ள இந்த அதிரடி வாக்குமூலம், கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய நற்பெயருக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதுடன் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.