ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் பல வடிவங்களில் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்களைக் குறிவைத்து ரஷ்ய உளவு அமைப்புகள் ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) என்னும் ஆபத்தான காதல் வலை உத்தியைப் பயன்படுத்தி வருவது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் தேசிய போலீஸ் தலைவர் இவான் விஹிவ்ஸ்கி (Ivan Vyhivskyi) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, உக்ரைன் நாட்டு இளம் பெண்களையும், பதின்ம வயதுச் சிறுமிகளையும் பணத்தாசை காட்டி ரஷ்ய உளவுத்துறை தங்களது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு மூளைச்சலவை செய்யப்படும் பெண்கள், நாட்டின் எல்லையில் போராடும் உக்ரைன் வீரர்களைக் காதலிப்பது போல நடித்துக் கொலை செய்யும் கொடூரமான சதிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆபத்தான ஆபரேஷனை ரஷ்யாவின் உளவு அமைப்புகள் டெலிகிராம் (Telegram) போன்ற சமூக ஊடகச் செயலிகள் மூலமாக அதீத ரகசியமாக ஒருங்கிணைத்து வருகின்றன. வறுமையில் இருக்கும் அல்லது எளிதாகப் பணம் சம்பாதிக்க நினைக்கும் உக்ரைன் பெண்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பெரும் தொகை தருவதாக ரஷ்ய முகவர்கள் தூண்டில் போடுகின்றனர். அதன் பின்னர், அந்தப் பெண்கள் பிரபல டேட்டிங் இணையதளங்கள் (Dating Websites) மூலம் உக்ரைன் ராணுவ வீரர்களைத் தொடர்பு கொண்டு பழகுகின்றனர். அவர்களை நேரில் சந்திப்பதற்காக சொகுசு குடியிருப்புகளை வாடகைக்கு எடுக்க ரஷ்ய உளவு அமைப்புகளே பின்னணியில் இருந்து பணத்தை வாரி இறைக்கின்றன.
இந்தச் சதியின் உச்சக்கட்டமாக, காதலிப்பது போல் நடிக்கும் இளம் பெண்கள், தங்களை நம்பி வரும் உக்ரைன் ராணுவ வீரர்களின் பானங்களில் ‘மெதடோன்’ (Methadone) எனப்படும் வீரியமிக்க செயற்கை ஓபியாய்டு மருந்தைக் கலந்து கொடுத்துக் கொலை செய்கின்றனர். அதிக அளவில் கொடுத்தால் மரணத்தை ஏற்படுத்தும் இந்த நச்சுப் பொருளை ரஷ்ய முகவர்களே அஞ்சல் பார்சல்கள் மூலம் இப்பெண்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். சமீபத்தில் உக்ரைனின் கைடோமிர் (Zhytomyr) பகுதியில், ராணுவ வீரர் ஒருவருக்கு விஷம் கொடுத்த வழக்கில் 17 வயது இளம் பெண் ஒருவர் உக்ரைன் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட போதே இந்த அதிர்ச்சிப் பின்னணி அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்தது.
உக்ரைன் நாட்டின் உளவுத்துறையின்படி, இதுவரை போர்ச் சூழலைப் பயன்படுத்தி தாய்நாட்டிற்குத் துரோகம் இழைத்ததாக, தீவைப்பு, பயங்கரவாதம் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட 1,100-க்கும் மேற்பட்ட உக்ரைன் குடிமக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் டெலிகிராம் மூலம் திட்டமிடப்பட்ட ஆறு ஒப்பந்தக் கொலைச் சம்பவங்களை உக்ரைன் போலீசார் கண்டறிந்துள்ளனர்; அதில் ஒரு கொலை முயற்சி நூலிழையில் முறியடிக்கப்பட்டுள்ளது. எல்லையில் நடக்கும் ஆயுதப் போரையும் தாண்டி, இணையம் மற்றும் காதலைக் கேடயமாகப் பயன்படுத்தி ரஷ்யா நடத்தும் இந்த மறைமுக ‘ஹனி ட்ராப்’ தகவல் யுத்தம் உக்ரைன் ராணுவ வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.