உத்திரப்பிரதேச மாநிலம் புலந்த்சகர் (Bulandshahr) மாவட்டத்தில், ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் யாரும் எதிர்பாராத விதமாக ரத்தக் களரியாக மாறியுள்ளது. குர்ஜா (Khurja) பகுதியில் உள்ள ஒரு ஜிம்மில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ஜீது (Jeetu) என்ற நபர், தனது முகத்தில் நண்பர்கள் கேக் பூசியதால் ஆத்திரமடைந்துள்ளார். விளையாட்டுக்காகச் செய்யப்பட்ட இந்தச் சிறிய செயல், ஒரு மாபெரும் உயிர்ப்பலியில் முடியும் என்று அங்கு யாரும் நினைத்திருக்கவில்லை.
தன் முகத்தில் கேக் பூசியதைக் அவமானமாகக் கருதிய ஜீது, ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மணிஷ், அவரது சகோதரர் அமர்தீப் மற்றும் உறவினர் ஆகாஷ் ஆகிய மூவரையும் நோக்கி கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளார். துப்பாக்கிக் குண்டுகள் நேரடியாக அவர்களின் தலையில் பாய்ந்ததில், மூன்று வாலிபர்களும் அதே இடத்தில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் நிமிடங்களில் சுடுகாடாக மாறிய இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, ஆதாரங்களை மறைப்பதற்காக அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்கள் மற்றும் பதிவுகளை எடுத்துக்கொண்டு ஜீது தப்பியோடிவிட்டார். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
தலைமறைவாக இருந்த கொலையாளி ஜீதுவை போலீஸார் சுற்றி வளைத்தபோது, அவர் போலீஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக போலீஸார் நடத்திய என்கவுண்டர் (Encounter) தாக்குதலில் கொலையாளி ஜீது சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு சிறிய கேக் தகராறு நான்கு உயிர்களைப் பறித்த இந்தச் சம்பவம், மனித உணர்ச்சிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு ஒரு பயங்கர உதாரணமாய் அமைந்துள்ளது.