தமிழகத் தேர்தலில் தவெக பெரும் வெற்றி பெற்றாலும், மும்முனைப் போட்டி நிலவியதால் விஜயால் தனித்துப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை. TVK கட்சி 108 இடங்களை மட்டுமே பிடித்த நிலையில், ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவையாக இருந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக தனது அரசியல் சித்து விளையாட்டுகளைத் தொடங்கியது. எப்படியாவது விஜயை நெருக்குக்கடிக்கு உள்ளாக்கி, சிறு கட்சிகளின் ஆதரவு வேண்டாம் என்று அவரைச் சலிப்படைய வைத்து, அதிமுகவின் ஆதரவைக் கோர வைக்க பாஜக போட்ட கணக்கு தற்போது தவிடுபொடியாகியுள்ளது.
முதலில் ஆளுநரை வைத்து நாடகத்தைத் தொடங்கிய பாஜக, 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று ஆளுநரைச் சொல்ல வைத்தது. இதனால் 10 இடங்களுக்காக விஜய் பல கட்சி அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியிருந்தது. இப்படி விஜயை அலைக்கழித்தால், ஒரு கட்டத்தில் அவர் விரக்தியடைந்து 47 இடங்களை வைத்துள்ள அதிமுகவின் ஆதரவைக் கேட்பார் என்று பாஜக எதிர்பார்த்துக் காத்திருந்தது.
ஆனால், எதற்கும் விஜய் அசையவில்லை. அதிமுக கூட்டணியுடன் கை கோர்க்கக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். இதற்காகக் கடந்த 4 நாட்களாகப் பல சிக்கல்களையும், அவமதிப்புகளையும் அவர் சகித்துக் கொண்டார். இதேவேளை, பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்குச் சார்பாகச் செயல்படும் ஊடகங்கள், “விஜய் அதிமுகவின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும்” என்று கூறி அவரது மனதை மாற்ற முயன்றன. அப்போதும் விஜய் தனது நிலையில் உறுதியாக நின்றார்.
விஜய்யின் இந்த மன உறுதியைப் பார்த்த சிறுபான்மைக் கட்சிகள் வியந்து போயின. மத்திய அரசின் சதிகளுக்கு எதிராக ஒற்றை ஆளாக நின்று விஜய் போராடுவதை உணர்ந்த கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் முதலில் ஆதரவு அளித்தன. அதனைத் தொடர்ந்து விசிக மற்றும் IUML முஸ்லிம் லீக் கட்சியும் விஜய்க்கு வரும் நெருக்கடிகளைப் பார்த்துத் தங்கள் ஆதரவை வழங்கின. இதில் ஸ்டாலினுக்கும் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது; கடைசி நேரத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தியே முஸ்லிம் லீக் கட்சி விஜய்க்கு ஆதரவளித்ததாகச் சொல்லப்படுகிறது.
சதித்திட்டத்தின் கடைசி அங்கமாக, டிடிவி தினகரன் நேற்று இரவு 10 மணிக்கு ஒரு பெரும் புரளியைக் கிளப்பிப் பார்த்தார். ஆனால், தவெக உடனடியாக ஆதார வீடியோவை வெளியிட்டு அந்தச் சதியையும் முறியடித்தது. இன்று மாலை 5 மணிக்குக் கூட, ஆளுநர் கேரளா செல்வதாகவும் விஜயைச் சந்திக்க முடியாது என்றும் கூறி திருப்பி அனுப்பினார்கள். ஆனால் அடுத்த 30 நிமிடங்களில் ஆளுநருக்கு மேலிடத்திலிருந்து கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி 6:30 மணிக்கு விஜயை மீண்டும் வந்து சந்திக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
ஆளுநரின் அத்தனை இழுத்தடிப்புகளையும் பொறுமையுடன் கையாண்ட விஜய், அவர் மீது எந்தக் கோபத்தையோ வெறுப்பையோ காட்டாமல் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஆளுநர் மாளிகையில் ஒன்று திரண்டதால், இனி எதனையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு ஆளுநர் தள்ளப்பட்டார். இறுதியில் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டார். கடைசி வரை எதற்கும் பணியாமல் நின்ற விஜயைப் போன்ற ஒரு தலைவரை முதலமைச்சராகப் பெறத் தமிழக மக்கள் தவம் செய்திருக்க வேண்டும்.