கடந்த பல ஆண்டுகளாக ரஷ்ய அரசின் தீவிர ஆதரவாளராகவும், எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு எதிராகப் புகார்களை அடுக்குபவராகவும் அறியப்பட்டவர் இலியா ரெமெஸ்லோ. ஆனால், கடந்த மார்ச் 2026-ல், “ஏன் நான் புடினை ஆதரிப்பதை நிறுத்தினேன்?” என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட ஒரு கட்டுரை ரஷ்ய அரசியலில் புயலைக் கிளப்பியது. அதில் உக்ரைன் போரினால் ரஷ்யப் பொருளாதாரம் சீரழிவதாகவும், புடின் ஒரு “போர்க் குற்றவாளி” என்றும் அவர் பகிரங்கமாகச் சாடியிருந்தார். இந்தப் பதிவைத் தொடர்ந்து அவர் சில காலம் மனநல மருத்துவமனையில் கட்டாயமாக அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில வாரங்களிலேயே, ரெமெஸ்லோ எவ்வித முன் அனுபவமும் இன்றி ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டார். இது திட்டமிடப்பட்ட ஒரு “தண்டனைப் பணி” (Punitive Deployment) என்றும், அதிபரை விமர்சிப்பவர்களுக்கு ரஷ்யா வழங்கும் எச்சரிக்கை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த மே 9 வெற்றி தின அணிவகுப்பிற்கு முன்னதாக நடந்த ஒரு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தற்போது தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் ராணுவ உயர் அதிகாரிகளையும் போர் உத்திகளையும் விமர்சிக்கும் பிலாக்கர்கள் அண்மைக்காலமாக மர்மமான முறையில் இறப்பதும் அல்லது தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஆண்ட்ரே மோரோசோவ் (Andrey Morozov) என்ற பிலாக்கர், ரஷ்யாவின் இழப்புகளை வெளியிட்டதால் ஏற்பட்ட நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார். அந்த வரிசையில், இப்போது இலியா ரெமெஸ்லோ ‘பீரங்கித் தீவனம்’ (Cannon Fodder) போலப் போர்க்களத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது ரஷ்யச் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
தற்போது உக்ரைன் போரில் ரஷ்யா சந்தித்து வரும் பின்னடைவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, சொந்த நாட்டுக்குள்ளேயே எழும் விமர்சனக் குரல்களை ஒடுக்க புடின் நிர்வாகம் மிகக் கடுமையான முறைகளைக் கையாண்டு வருகிறது. இலியா ரெமெஸ்லோவின் மரணம், “அரசை ஆதரிக்கும் வரை மட்டுமே ஒருவருக்குப் பாதுகாப்பு” என்பதை ரஷ்ய ஊடகவியலாளர்களுக்கு உணர்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் ரஷ்யாவிற்குள் புடினுக்கு எதிராக மறைமுகமாக வளர்ந்து வரும் அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.