Posted in

பிரைட்டனில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு மது அருந்தி மோதல்: அச்சத்தில் உள்ளூர் மக்கள்!

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கடலோர நகரமான பிரைட்டனில், வார இறுதி நாட்களில் நூற்றுக்கணக்கான பதின்ம வயது இளைஞர்கள் (Teens) ஒன்றாகத் திரண்டு மது அருந்துவதும், பொதுவெளியில் மோதிக்கொள்வதும் பெரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கோடைக்காலம் தொடங்கும் வேளையில், இளைஞர்களின் இந்த அலைமோதும் கூட்டமும் வன்முறைகளும் கடற்கரைச் சூழலையே சீர்குலைத்து வருவதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்கும் இளைஞர்கள், மதுபானங்களை அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதிலும், பிற குழுக்களுடன் மோதலில் ஈடுபடுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் கத்திக்குத்து மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கும் அளவிற்கும் வன்முறைகள் முற்றியுள்ளது அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.

குறிப்பாக கடற்கரைப் பகுதிகள் மற்றும் உணவகங்களுக்கு அருகில் இதுபோன்ற மோதல்கள் நடப்பதால், சுற்றுலாப் பயணிகளும் குழந்தைகளுடன் வரும் குடும்பங்களும் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கடைகளைச் சேதப்படுத்துவது, பொதுச் சொத்துக்களை அழிப்பது மற்றும் மதுபாட்டில்களை வீசி எறிவது போன்ற செயல்களால் வணிகர்களும் வர்த்தக ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த பிரைட்டன் நகரக் காவல் துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவதோடு, கடற்கரைப் பகுதிகளில் மது அருந்துவதற்கான கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.