Posted in

ரீல்ஸ் ஆட்சி: எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி பதில்!

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி “ரீல்ஸ் ஆட்சி” மட்டுமே நடத்தி வருகிறது என்றும், 100 நாட்கள் ஆட்சியில் மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். டெல்டா மாவட்ட வறட்சி மற்றும் விவசாயிகள் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவர் தெரிவித்த இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தைக் கிளப்பின.

எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கடுமையான விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “யார் ரீல்ஸ் போடுகிறார்கள்? மாற்றம் வர வேண்டும் என்றும், ஏற்றம் வர வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் போட்டு எழுதியதே தமிழ்நாட்டு மக்கள்தான்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், மன்னராட்சியைப் போல ஒரே குடும்பம் மட்டும் மகிழ்ச்சியடைவதைத் தவிர்த்து, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற வேண்டும் என்பதே மக்கள் எண்ணம் எனக் குறிப்பிட்டார். தற்போதைய முதலமைச்சர் விளம்பரங்களின்றிச் சத்தமில்லாமல் பல மக்கள் நலச் சாதனைகளைச் செய்து வருகிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

717 டாஸ்மாக் கடைகளை மூடியதில் இருந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியது வரை அரசு தினந்தோறும் சாதனை படைத்து வருவதாகக் கூறிய அமைச்சர் ராஜ்மோகன், “ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையைச் சாமானிய மக்கள் மனதில் விதைத்துள்ளதே மாபெரும் சாதனை” என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார்.