பிரான்ஸ் நாட்டின் பிரபல அரசியல் பத்திரிகையாளர் புளோரியன் தார்டிஃப் (Florian Tardif) எழுதியுள்ள ‘அன் கப்பிள் (பிரெஸ்க்) பர்பெக்ட்’ (An (Almost) Perfect Couple) என்ற புதிய புத்தகம் சமீபத்தில் வெளியாகி பிரான்சில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நூலில், பிரான்ஸ் அதிபர் மாளிகையான எலிசி பேலஸில் (Élysée Palace) பணியாற்றும் ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், நீக்குவதிலும் அதிபரின் மனைவி பிரிஜிட் மேக்ரோன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 20-களில் இருந்த ஒரு இளம் பெண் இன்டர்ன் (Intern) தனது கவர்ச்சியான அணுகுமுறையால் அதிபரின் கவனத்தை ஈர்க்க முயன்றதாகக் கூறி, அவரை பிரிஜிட் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கியதாக இந்த புத்தகம் அம்பலப்படுத்தியுள்ளது.
புத்தகத்தின் ஆசிரியரான தார்டிஃப் பிரெஞ்சு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அதிபர் இம்மானுவேல் மேக்ரோனைச் சுற்றி இருக்கும் பெண்களைப் பிரிஜிட் எப்போதும் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். “அதிபர் மாளிகைக்குள் தங்களுக்குத் தேவையான காரியங்களைச் சாதிக்க, சில இளம் பெண்கள் தங்களது அழகையும் கவர்ச்சியையும் ஆயுதமாகப் பயன்படுத்துவதை பிரிஜிட் விரும்புவதில்லை” என்று நூலில் கூறப்பட்டுள்ளது. இதனாலேயே, எலிசி பேலஸின் ஒட்டுமொத்தப் பணியாளர்கள் தேர்வு மற்றும் பாதுகாப்பு அடுக்கில் பிரிஜித்தின் இறுதி முடிவே பிரதானமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த ஆண்டு வியட்நாம் விமான நிலையத்தில் அதிபர் மேக்ரோனின் முகத்தில் பிரிஜிட் தள்ளிய உலகப் புகழ்பெற்ற ‘ஹனோய் ஸ்லாப்’ (Hanoi Slap) சம்பவத்தின் பின்னணியையும் இந்த புத்தகம் விவரித்துள்ளது. ஈரான் நாட்டின் முன்னணித் திரைப்பட நடிகையான கோல்ஷிஃப்தே ஃபரஹானிக்கு (Golshifteh Farahani) அதிபர் மேக்ரோன் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றைப் பார்த்ததால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே பிரிஜிட் அவ்வாறு நடந்துகொண்டார் என நூலாசிரியர் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரங்கள் பிரான்ஸ் அதிபர் தம்பதியின் ‘மிகச்சிறந்த தம்பதி’ என்ற பிம்பத்தை சர்வதேச அளவில் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்துப் பிரான்ஸ் அதிபர் மாளிகை வட்டாரம் மற்றும் பிரிஜிட் மேக்ரோனின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் இருந்து கடுமையான மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிஜிட் மேக்ரோன் தனது கணவரின் மொபைல் போனை ஒருபோதும் சோதித்துப் பார்ப்பதில்லை என்றும், புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் வெறும் கற்பனையான ‘புனையப்பட்ட செய்திகள்’ (Fake News) என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர். இந்தத் தொடர் சர்ச்சைகள், வரும் ஜூன் மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற உள்ள பிரிஜிட் மேக்ரோன் தொடர்பான மற்றொரு அவதூறு வழக்குடன் இணைந்து பிரான்ஸ் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.