Posted in

எலிக் காய்ச்சலால் தவித்த நோயாளி; பாராசூட் மூலம் தீவில் குதித்த பிரிட்டிஷ் வீரர்கள் – 9,000 கி.மீ தூரம் பறந்து வந்து ராணுவம் ; ‘டிரிஸ்டன் டா குன்ஹா’ தீவில் பரபரப்பு!

‘MV Hondius’ என்ற சொகுசு கப்பலில் இருந்து இறங்கிய பிரிட்டிஷ் குடிமகன் ஒருவருக்கு ‘ஹான்டா வைரஸ்’ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. டிரிஸ்டன் டா குன்ஹா தீவில் வசித்து வரும் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஆக்சிஜன் அளவு கிரிட்டிக்கல் நிலைக்குச் சென்றது. அந்தத் தீவில் விமான நிலையம் கிடையாது என்பதோடு, கப்பல் மூலம் அங்குச் செல்ல பல நாட்கள் ஆகும் என்பதால், பிரிட்டிஷ் விமானப்படையின் A400M ரக விமானம் மூலம் 16-வது ஏர் அசால்ட் பிரிகேட் (16 Air Assault Brigade) வீரர்கள் மற்றும் ராணுவ மருத்துவர்கள் பாராசூட் மூலம் தீவில் குதித்து உயிர்காக்கும் சிகிச்சையைத் தொடங்கினர்.

இந்தத் துணிச்சலான நடவடிக்கையில், 6 பாராசூட் வீரர்கள் மற்றும் 2 ராணுவ மருத்துவர்கள் லண்டனில் இருந்து சுமார் 9,788 கிலோமீட்டர் தூரம் பயணித்து, தீவின் ஒரு குறுகிய பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கினர். இவர்களுடன் 3.3 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசர ஆக்சிஜன் சிலிண்டர்களும் வான்வழியே பாராசூட் மூலம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டன. பிரிட்டிஷ் ராணுவ வரலாற்றில், இதுபோன்று மனிதாபிமான உதவிக்காக மருத்துவர்கள் பாராசூட் மூலம் ஒரு தீவில் தரையிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதிவேகக் காற்று மற்றும் மேகமூட்டமான வானிலை போன்ற கடும் சவால்களுக்கு மத்தியிலும், இந்த மீட்புப் பணி மிகச் சரியாகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. தீவில் தரையிறங்கிய மருத்துவக் குழுவினர், அங்குள்ள இரண்டு பேர் கொண்ட சிறிய மருத்துவக் குழுவுக்குத் துணையாக நின்று, பாதிக்கப்பட்ட நோயாளிக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அந்த நோயாளி சீரான நிலையில் (Stable) இருப்பதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் வெளியுறவுத் துறைச் செயலர் யெவெட் கூப்பர், இந்தச் சவாலான பணியை மேற்கொண்ட ராணுவ வீரர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். “தங்களது குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது” என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். சொகுசு கப்பலில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு, உலகின் கடைசி எல்லை வரை சென்றிருந்தாலும், ராணுவத்தின் இந்தத் துரித நடவடிக்கை ஒரு பெரிய உயிர்ப்பலியத் தடுத்துள்ளது.