Posted in

ஏய்… நிறுத்துடா வண்டிய – நடுரோட்டில் மதுபோதையில் இளம்பெண்கள் அட்டகாசம்: ஸ்தம்பித்த சென்னை புழல் பகுதி!

சென்னை புழல் ஜி.என்.டி. (GNT) சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளம்பெண்கள், கடும் மதுபோதையில் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டுப் போக்குவரத்தைச் சீர்குலைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்த நேரத்தில், பெண்களின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மற்றொரு வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, “ஏய்… நிறுத்துடா வண்டிய…” என்று நடுரோட்டில் நின்றுகொண்டு சக வாகன ஓட்டிகளை ஆக்ரோஷமாக மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் அட்டகாசத்தைக் கண்டு அஞ்சிய சிலர் மாற்றுப் பாதையில் செல்ல முயன்றபோதும், அவர்களை வழிமறித்து அந்தப் பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றபோது, “என்னய்யா போலீஸ் நீ…” என்று காவல்துறையினரிடமே அந்த இளம்பெண்கள் போதையில் எகிறி வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதன்பின்னர், போக்குவரத்துப் காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தி, அப்பகுதியில் இருந்த போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

பொது இடங்களில் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளம்பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.