அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் (Houston) நகர நீர்நிலைகளான ‘பாயு’ (Bayous) பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகளையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையிலும் சில சடலங்கள் அங்குள்ள நீர்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நகரில் தொடர் கொலையாளி (Serial Killer) யாராவது நடமாடுகிறாரா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் பரவியது.
எனினும், இந்த வதந்திகளை ஹூஸ்டன் நகர மேயர் ஜான் விட்மயர் (John Whitmire) மற்றும் காவல்துறை ஆணையர் ஜே. நோயி டயஸ் (J. Noe Diaz Jr.) ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்கள், நகரில் சீரியல் கில்லர் எவரும் உலா வரவில்லை என்றும், கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கு இடையே எந்தவொரு குறிப்பிட்ட தொடர்போ அல்லது ஒரே மாதிரியான கொலை வடிவமோ (Pattern) இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
குற்றவியல் வல்லுநர்கள் மற்றும் மருத்துவ பரிசோதகர்களின் கூற்றுப்படி, மீட்கப்பட்ட உடல்களில் பல்வேறு பாலினம், வயது மற்றும் இனங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். எதிர்பாராத விபத்துகள், போதை மயக்கம், வீடற்றவர்களின் மரணங்கள் அல்லது மன அழுத்தம் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்களே அதிகம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இருப்பினும், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்த வேண்டும் மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது அசம்பாவிதங்களையோ கண்டால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.