கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, எல்லை தாண்டிச் சென்று இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்துார்’ நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் விமானப் படைக்குத் தாங்கள் களத்திலேயே (On-site) தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாகச் சீனப் பொறியாளர் ஜாங் ஹெங் (Zhang Heng) ஒப்புக்கொண்டுள்ளார். சீனாவின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷனைச் சேர்ந்த இவர், பாகிஸ்தானின் ஜே-10சிஇ (J-10CE) போர் விமானங்களைச் சீராக இயக்கவும், அவற்றின் முழுத் திறனை வெளிப்படுத்தவும் தங்களது குழுவினர் பாகிஸ்தான் விமானப் படைத் தளங்களிலேயே தங்கியிருந்து உதவியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அதிரடித் தாக்குதலின் போது பாகிஸ்தான் எல்லைக்குள் வான்வழிச் சைரன்கள் ஒலித்தபடியே இருந்ததாகவும், கடும் வெப்பத்திற்கு மத்தியிலும் சீனக் குழுவினர் பாகிஸ்தான் வீரர்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றியதாகவும் அந்தப் பொறியாளர் குறிப்பிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட போர் விமானத்தைப் பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகச் சீனா உரிமை கோரிய நிலையில், அந்த விமானத்தின் செயல்பாட்டிற்குத் தங்களது தொழில்நுட்ப ஆலோசனைகளே முக்கியக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு போரின் போது சீனப் பணியாளர்கள் நேரடியாகப் பாகிஸ்தானுக்கு உதவியதைச் சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஒப்புதல் குறித்து இந்தியப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர். கடந்த 2025 ஜூலை மாதமே இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி ராகுல் சிங், “ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது இந்தியா மூன்று எதிரிகளை (பாகிஸ்தான், சீனா, துருக்கி) எதிர்கொண்டது” என்று குறிப்பிட்டிருந்தார். சீனா வெறும் உளவுத் தகவல்களை மட்டும் வழங்காமல், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நேரடித் தொழில்நுட்ப ஆதரவையும் பாகிஸ்தானுக்கு வழங்கியது இப்போது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 80 சதவீத ஆயுதத் தேவையைச் சீனாவே பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடி வரும் வேளையில் வெளியாகியுள்ள இந்தச் செய்தி, இந்தியப் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உடனான எந்தவொரு எதிர்கால மோதலிலும் சீனாவின் மறைமுக அல்லது நேரடித் தலையீடு இருக்கும் என்பதை இந்த ‘ஒப்புதல் வாக்குமூலம்’ உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது சீனா மற்றும் பாகிஸ்தானின் இந்த ராணுவக் கூட்டணிக்கு இந்தியா எவ்வாறு பதிலடி கொடுக்கும் என்பதே இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்.