இமயமலைப் பிராந்தியத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்குப் பிறகு, சீனா-நேபாள எல்லையில் உள்ள மிக முக்கியமான கிராங் (Gyirong) எல்லைப் பகுதிக்கு முதல்முறையாகச் சென்றடைந்த சீன மீட்புக் குழுவினர், அங்கு “இடிபாடுகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை” என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அடர்ந்த காடுகள், செங்குத்தான பாறைகள் மற்றும் சேதமடைந்த பாதைகளைக் கடந்து கயிறுகளின் உதவியுடன் எல்லையை அடைந்த 21 பேர் கொண்ட சிறப்பு மீட்புக் குழுவினர் இந்தப் பேரழிவின் கொடூர நிலையை நேரில் கண்டு விவரித்துள்ளனர்.
நேபாளம் மற்றும் திபெத் எல்லையை இணைக்கும் இந்த எல்லைச் சாவடி வளாகம், வெள்ளத்தில் மிதந்து வந்த பிரம்மாண்டக் பாறைகள் மற்றும் கழிவுகளால் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டு அழிந்துபோயுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் நேபாளத்தில் 626 பேரும், திபெத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எல்லையின் இருபுறமும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தற்போது 3,000-ஐ நெருங்கியுள்ளதாக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
கடும் இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் இருப்பவர்களை மீட்கச் சீன மற்றும் நேபாள ராணுவத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், தரைவழிப் பாதைகள் மற்றும் பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால், துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கான போக்குவரத்தைச் சீரமைக்க உடனடி உதவியாக ‘பெய்லி பாலங்களை’ (Bailey Bridges) வழங்கி உதவுமாறு நேபாள அரசு அண்டை நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட ஆற்றின் மேல் பகுதியில் தற்காலிகமாக உருவாகியுள்ள பனிப்பாறை ஏரிகள் மேலும் உடைப்பெடுக்கும் ஆபத்து நீடிப்பதால், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்குப் பொதுவான சர்வதேசக் குழுக்கள் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள நேபாள அரசு, உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுதல், டி.என்.ஏ பரிசோதனை மற்றும் சுரங்கப் பாதைகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான சிறப்புத் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு சர்வதேசச் சமூகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.