தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவராக இருந்து இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதலமைச்சர் அறைக்குச் சென்றவுடன் மூன்று மிக முக்கியமான அரசாணைகளில் கையெழுத்திட்டார். இதில் முதன்மையானது, தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் மாதம் ‘200 யூனிட் இலவச மின்சாரம்’ வழங்கும் திட்டமாகும். நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மின்சாரக் கட்டணச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்தத் தேர்தல் வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார். அடுத்ததாக, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க “போதைப்பொருள் இல்லாத தமிழகம்” (Drug-Free Tamil Nadu) என்ற விசேஷ அதிரடிப் படையை உருவாக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மூன்றாவதாக, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘பெண்கள் பாதுகாப்புப் படை’ (Women Protection Force) என்ற புதிய பிரிவை மாநிலம் முழுவதும் உருவாக்க முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். இந்தக் கோப்புகளில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, அரசு நிர்வாகத்தில் ஊழலுக்கு இடம் இருக்கக்கூடாது என்றும், வெளிப்படையான நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
நிதியமைச்சக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது, தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்துக் கவலை தெரிவித்த விஜய், கஜானாவில் உள்ள நிதி இருப்பு மற்றும் கடந்த காலக் கடன் சுமை குறித்து விரிவான தரவுகளைக் கேட்டறிந்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிதிச் சிக்கல்கள் ஏற்படாதவாறு வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராயும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக, 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை ஜூன் மாதம் முதல் அமல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டங்கள், விஜய்யின் நிர்வாகத் திறமை மற்றும் அவரது அரசியல் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தன. 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய், தனது முதல் நாளிலேயே அதிரடித் திட்டங்களை அறிவித்துத் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். “மக்கள் நலனே முதன்மை” என்ற கொள்கையின்படி தனது அரசு செயல்படும் என்று அதிகாரிகளிடம் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.