தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உரிமைத் தொகை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இந்தக் கோப்பினை முதற்கட்டமாக ஆய்வு செய்துள்ளார். சமூக நலத்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் விடுபடாமல் இந்தத் தொகை சென்றடைவதை உறுதி செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த பணிகள் தற்போது இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், வரும் ஜூலை மாதம் முதல் உயர்தப்பட்ட உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 1,000 ரூபாய் பெற்று வந்த சுமார் 1.15 கோடி மகளிரோடு, புதிய விண்ணப்பதாரர்களையும் இணைத்து இந்தத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநில பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான சிறப்பு நிதி மேலாண்மைத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் முடுக்கிவிட்டுள்ளார்.
விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது என்றும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்காக “மக்களுடன் முதல்வர்” பயணத்தின் போது பெறப்பட்ட கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட உள்ளன. இந்தத் தொகை உயர்வு மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள நிதிச் சிக்கல்கள் குறித்துக் கேள்வி எழுப்பி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் தனது நிர்வாகத் திறமை மூலம் இதைச் சாத்தியமாக்கிக் காட்டியுள்ளார். குறிப்பாக, டாஸ்மாக் வருவாயைக் குறைத்து மாற்று வருவாய் ஈட்டும் அதே வேளையில், இத்தகைய நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது ஒரு மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், “சொன்னதைச் செய்வோம்” என்ற தாரக மந்திரத்துடன் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் உறுதியாக இருப்பது மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.