தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, முதன்முறையாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு இன்று (ஜூன் 29) தொடங்கியது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை 100% உறுதிப்படுத்துவது தொடர்பாகப் பல அதிரடி உத்தரவுகளை முதலமைச்சர் விஜய் பிறப்பித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய், “வெளிப்படையான, நேர்மையான, லஞ்சமற்ற மற்றும் சமூக நீதிக்கான அரசை மக்கள் எதிர்பார்த்தே நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்; தவறு செய்தவர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், எந்தவொரு பாரபட்சமுமின்றி சட்டப்படி உடனடியாகத் துரித நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதேநேரம், தப்பித் தவறிக்கூட எந்தவொரு நிரபராதியும் இதில் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது” என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்துப் பேசிய முதலமைச்சர், இதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை (‘நோ சேஞ்ச், நோ காம்ப்ரமைஸ்’) என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதை எக்காரணம் கொண்டும் சகிக்க முடியாது. கல்வி நிறுவனங்களில் இத்தகைய புகார்களை மறைக்கவோ, தாமதப்படுத்தவோ முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோர் தங்களின் மாதாந்திர ஆய்வின் போது வழக்குகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், விசாரணையின் தரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த இழப்பீடு குறித்தும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இதுமட்டுமன்றி, தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஒழிப்பு, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பள்ளிகளில் சாதி அடிப்படையிலான வன்முறைகளை ஒடுக்குவது போன்றவற்றில் வருவாய்த்துறையும் காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். மேலும், பருவமழை காலத்திற்கு முன்பாகவே சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மீட்பு உட்கட்டமைப்பு வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைத் துறைக்கும் அவர் உத்தரவிட்டார். “மக்களுக்கு நல்லது செய்யுங்கள், நல்லது நடக்கும்; தெளிவு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் (Clarity & Transparency) அதிகாரிகள் செயல்பட வேண்டும்” என்ற அறிவுரையுடன் முதலமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.