தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பி. மாணிக்கம் தாகூர் இன்று (ஜூன் 29) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் தலைமை கடந்த சனிக்கிழமை அவரைப் புதிய தலைவராக அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று மாலை 4 மணியளவில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
இருப்பினும், புதிய தலைவர் சத்தியமூர்த்தி பவனிற்குள் நுழைந்து முறைப்படி பதவியேற்பதற்கு முன்பாக அங்கு ஒரு அசாதாரணமான சூழல் நிலவியது. புதிய தலைவர் மாணிக்கம் தாகூரும், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகையும் அலுவலக வளாகத்திற்குள் ஒன்றாக வந்தபோது, அங்கிருந்த நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் சேவாதள நிர்வாகிகள் உற்சாக மிகுதியால் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். இதனால் தலைவர்கள் இருவரும் மேற்கொண்டு முன்னேறிச் செல்ல முடியாமல் நுழைவாயிலிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
தொண்டர்களின் இந்த முண்டியடிப்பாலும், வழிவிடாமல் முடக்கிய கூட்ட நெரிசலாலும் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் கோபமடைந்தார். நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டிய சேவாதள தொண்டர்களே வழியை மறித்து நின்றதால், பொறுமையிழந்த அவர், “எனக்கே வழி இல்லையா? கொஞ்சம் வழிவிடுங்க, புரோட்டோகால் படி நிறைய வேலை இருக்கு, தயவுசெய்து வெளிய போங்கண்ணே” என்று மிகக் கடுமையான தொனியில் கத்தி, தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். இந்த திடீர் மோதல் மற்றும் சலசலப்பு அங்கிருந்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதைத் தொடர்ந்து மாணிக்கம் தாகூர் மேடைக்குச் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி 141 ஆண்டுகாலப் பாரம்பரியம் மிக்கது. அனைவரும் தங்களின் ஈகோக்களை (Ego) விட்டுவிட்டு உழைத்தால் மட்டுமே கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். காங்கிரஸை யார் தொட்டாலும் தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.