நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (NLC India) பங்குகளைத் தனியார் மயமாக்கும் நோக்கில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய முடிவுக்குத் தமிழ்நாடு அரசு தனது கடுமையான கொள்கை ரீதியான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 25, 2026) பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். என்எல்சி நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 2 சதவீத அடிப்படைப் பங்குகள் மற்றும் 1 சதவீத கூடுதல் பங்குகள் (Green-shoe Option) என மொத்தம் 3 சதவீதப் பங்குகளை ‘விற்பனைக்கான சலுகை’ (Offer for Sale – OFS) மூலம் விற்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
என்எல்சி இந்தியா நிறுவனம் என்பது வெறும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சாதாரண வணிக நிறுவனம் அல்ல என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், அது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளில் ஈடுபட்டுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு “தேசிய சொத்து” என்று சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய முக்கியப் பொதுத்துறை நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது, அது எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும், பொது உடமைத் தன்மைக்கு மிகத் தவறானதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் தனது கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
மேலும், என்எல்சி நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் பல தசாப்த காலச் செயல்பாடுகள் என அனைத்திலும் தமிழ்நாட்டின் மண்ணோடும், மக்களின் வாழ்வோடும் இரண்டறக் கலந்த ஒன்று என்பதை முதல்வர் விஜய் பிரதமருக்கு நினைவூட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 மற்றும் அதன் முக்கிய அனல்மின் நிலையங்கள் அனைத்தும் மாநில அரசு மற்றும் உள்ளூர் மக்களின் முழு ஒத்துழைப்போடு, தமிழக அரசு இயந்திரத்தின் மூலம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று அவர் அதில் விவரித்துள்ளார்.
நிலம் கொடுத்த மக்களின் பல சகாப்த காலத் தியாகங்கள், மாநில அரசின் விரிவான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமே இந்த பொதுத்துறை நிறுவனம் இந்த அளவிற்குப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. எனவே, இந்த நிறுவனத்தின் எதிர்காலத்தின் மீது தமிழக அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது என்றும், இது நிதி சார்ந்த அம்சங்களைத் தாண்டி மாநில மக்களின் நீண்டகால நலன்களோடு தொடர்புடையது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்த பொதுத்துறை நிறுவனம் முழுமையாக அரசின் உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் மட்டுமே நீடிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவை ஏற்று, இந்த பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.