தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பாதுகாப்பு நடைமுறைகளின்படி விஜய்க்கு அரசு சார்பில் குண்டு துளைக்காத உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட அதிகாரப்பூர்வ கார் வழங்கப்பட்டது. சில நாட்கள் அந்த காரைப் பயன்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அவர் தனது சொந்தப் பயன்பாட்டிலிருந்த ‘லேன்ட் ரோவர் டிஃபெண்டர்’ (Land Rover Defender) காரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அரசு காரை விடத் தனது சொந்த காரில் பயணம் செய்வதே வசதியாகவும், எளிமையாகவும் இருப்பதாக அவர் கருதுவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றவுடன் புதிய சொகுசு கார்களை வாங்குவது வழக்கமாக இருக்கும் நிலையில், விஜய் அரசுப் பணத்தைச் சேமிக்கும் விதமாக இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் எனப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் இருக்கையில் இருந்த ‘வெள்ளை துண்டு’ கலாச்சாரத்தை அகற்றி அதிரடி காட்டிய விஜய், இப்போது கார் பயன்பாட்டிலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது “விஐபி கலாச்சாரத்திற்கு” எதிரான அவரது அடுத்தகட்ட நகர்வாகவே அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு கான்வாய் (Convoy) வாகனங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் முதலமைச்சரின் வருகைக்காகப் போக்குவரத்து நிறுத்தப்படுவதைத் தவிர்க்கவும், சாமானிய மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் அவர் இத்தகைய எளிமையான நடைமுறைகளை விரும்புவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடி முயற்சியாகவும் கருதப்படுகிறது.
இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகள் முதலமைச்சரின் இந்த முடிவிற்குச் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது. முதலமைச்சரின் சொந்த காரிலும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எளிய நிர்வாகம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளைத் தனது பாணியாகக் கொண்டுள்ள முதல்வர் விஜய்யின் இந்தச் செயல், தமிழக அரசியலில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.