மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, ‘ஒர்னாப்’ (Cyclone Arnab) என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இது தீவிரப் புயலாக மாறக்கூடும் என்றும், ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே அக்டோபர் 28-ஆம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர். இதன் காரணமாகக் மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளை நோக்கி நகர்வதால், தமிழ்நாட்டிற்கு நேரடிப் பாதிப்பு இல்லை என்ற போதிலும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நிலவரத்தைக் கூர்ந்து கவனித்து வரும் வானிலை மையம், பொதுமக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.