சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாநில மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய்யின் டெல்லி பயணம் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அண்மையில் முதலமைச்சர் விஜய் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியதைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “Mr. Chief Minister.. பதில் சொல்லுங்க, நீங்க டெல்லி போனது இதுக்குத் தானா?” என்று மேடையிலேயே சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
முதலமைச்சரின் டெல்லி பயணத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், “கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சில முக்கியப் புலனாய்வு விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகத் தான் முதல்வர் விஜய் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து வந்தாரா என்று நாம் கேட்கலாம். ஆனால் நான் அந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து கேள்வி கேட்க மாட்டேன்” என்று மறைமுகமாகப் பாய்ந்துள்ளார். மேலும், தவெக அரசு பாஜகவின் ஒரு ‘ஜெராக்ஸ் நகல்’ (Xerox copy) போலச் செயல்பட்டு வருவதாகவும், முதலமைச்சரின் செயல்பாடுகளில் எந்தவொரு தெளிவும் இல்லை என்றும் அவர் சாடினார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். “தமிழகத்தில் அண்மைக் காலமாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகளே சம்பந்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன; தற்பொழுது தவெகவிடமிருந்தே பெண்களுக்குப் பாதுகாப்புத் தேட வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது” என்று அவர் சாடினார். மேலும், ஆட்சிப் பெரும்பான்மையைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை விஜய் கோருவதைப் பார்க்கும்போது, அவருக்குத் தமக்கு ஆதரவளித்த கட்சிகள் மீதே நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது என்றும் விமர்சித்தார்.
திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் போன்ற தொலைநோக்குத் திட்டங்களைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தற்போதைய தவெக ஆட்சியில் மின்வெட்டு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் “ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம்” என்று மக்கள் யோசிக்கும் சூழல் ஒரு மாத காலத்திற்குள்ளேயே உருவாகிவிட்டதாகத் தெரிவித்தார். சமூக ஊடக விளம்பரங்களை மட்டுமே நம்பி நடக்கும் இந்த அரசு, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டதாகக் கூறி, திமுகவினர் மக்கள் மத்தியில் தவெக அரசின் போலி முகத்திரையைக் கிழிக்க தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.