நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடைப் பேச்சுகளில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோரை ஒருமையில், தரக்குறைவாகப் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், தவெக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவருமான அதிசயா தலைமையில் சென்ற குழுவினர், சீமான் மீது அவதூறு வழக்குத் தொடரக் கோரி இந்தப் புகாரை அளித்து, அதற்கான நகலையும் (CSR/COP) பெற்றுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் அதிசயா, கச்சத்தீவு விவகாரம் குறித்துப் பேசும்போது மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை சீமான் ஒருமையில் கேலி செய்துள்ளதையும், முதலமைச்சரின் ‘தளபதி 69’ திரைப்படம் மற்றும் அவரது சினிமாப் பயணத்தை நாகரிகமற்ற முறையில் விமர்சித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். “தேர்தலில் வென்று முதலமைச்சரான பிறகு, அரசியல் நாகரிகம் கருதி சீமானை நேரில் சென்று விஜய் பார்த்துவிட்டு வந்தார். ஆனால், குறைந்தபட்ச அரசியல் நாகரிகம் கூட இல்லாமல், கூட்டத்தில் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காகவே சீமான் இத்தகைய நையாண்டிகளையும், தரக்குறைவான விமர்சனங்களையும் பேசி வருகிறார்” என்று அவர் வன்மையாகக் கண்டித்தார்.
தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஒரே மாதத்திற்குள் தமிழகத்தில் பல்வேறு அதிரடி நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார் என்றும் தவெக வழக்கறிஞர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். தமிழகத்தில் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டது, பொதுமக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு ரூ.50,000 பயிர்க்கடன் தள்ளுபடி, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ உருவாக்கம், பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரித் தள்ளுபடி மற்றும் ஆழமான கல் குவாரிகளுக்குத் தடை விதித்தது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனைகளை இந்த அரசு குறுகிய காலத்தில் செய்து காட்டியுள்ளதாக அவர்கள் விவரித்தனர்.
மேலும், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தடையில்லாமல் வழங்கப்படுவது, அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டுத் தரமான உணவுகள் வழங்கப்படுவது மற்றும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பைச் சீரமைப்பது என முதலமைச்சர் விஜய் மக்கள் நலனில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர். இத்தகைய சூழலில், மக்கள் பிரதிநிதிகளைத் தொடர்ந்து அவமதித்து வரும் சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இனி வரும் காலங்களில் அவர் முதலமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ அவதூறாகப் பேசினால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தவெக வழக்கறிஞர் பிரிவு எச்சரித்துள்ளது.

