தமிழகத்தில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது ஆளும் திமுக தரப்பில் தில்லுமுல்லு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் ஆணையத்திடம் அதிரடியாகப் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாகத் தவெக கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து விரிவான மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் குளறுபடிகளைத் தவிர்க்கவும், முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கவும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் மத்தியப் பாதுகாப்புப் படையினரை அதிக அளவில் பணியமர்த்த வேண்டும் என்று தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்குகள் தொடர்பான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிர்மல்குமார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தபால் வாக்குகள் யாரிடமிருந்து பெறப்பட்டன என்பதைப் பதிவேட்டில் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும் என்றும், தபால் வாக்குகளை ஸ்கேன் செய்வதோடு, அவற்றை எண்ணும் பணிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்து அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள கடைசி இரண்டு சுற்று வாக்குகளை எண்ண வேண்டும் என்ற நிபந்தனையையும் தவெக முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கைகள் மூலம் தேர்தல் நடைமுறையில் எவ்வித குளறுபடிகளும் இன்றி நேர்மையான முறையில் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பதே தவெகவின் முக்கிய நோக்கமாக உள்ளது.