ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலூசிஸ்தானில் (Sistan-Baluchistan), ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 3 காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சகெடான் (Zahedan) நகரில் நடந்த இந்தத் தாக்குதலில், முதலில் ஒரு அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், காயமடைந்த மேலும் இரண்டு அதிகாரிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் நாட்டின் மிகவும் பின்தங்கிய மற்றும் பதற்றமான பகுதியாகக் கருதப்படும் இந்த மாகாணம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சன்னி முஸ்லிம் சிறுபான்மையினரான பலூச் இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஜெய்ஷ் அல்-அத்ல்’ (Jaish al-Adl) போன்ற பிரிவினைவாத குழுக்களுக்கும், ஈரான் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்கள் நீடித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாகவே ஈரானில் உள்நாட்டு மோதல்கள் மற்றும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக ஜனவரி 2026-ல் வெடித்த பாரிய மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு, அரசு அதீத அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. போராட்டங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் ஈரான் அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
தற்போது உயிரிழந்த அதிகாரிகளில் ஒருவரின் பெயர் முகமதுரெசா நிசாம்தூஸ்ட் (Mohammadreza Nezamdoost) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈரானியப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எல்லையோரப் பகுதிகளில் கடத்தல்காரர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் ஊடுருவலைத் தடுக்க கூடுதல் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.