தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த பெண் நிர்வாகிகள் குறித்து இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வீடியோ வெளியிட்ட புகாரில், திமுக-வின் ‘ஜென் ஜி’ (Gen Z) அணியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரான ஆர்ஜே சரண் ஜெயராமன் என்கிற சரண்ராஜ், கொளத்தூர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் பகுதியில் தங்கியிருந்த அவரைத் தனிப்படை போலீஸார் நள்ளிரவில் மடக்கிப் பிடித்து, தற்பொழுது ரகசிய இடத்தில் வைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக – தவெக இடையே அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த லூது சகாயமரி என்ற பெண் நிர்வாகி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் தனது புகாரில், “நான் இன்ஸ்டாகிராமில் ‘ஆர்த்தி விஷா’ என்ற பெயரில் கணக்கு தொடங்கி, கடந்த சில நாட்களாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் முதலமைச்சர் விஜய் அவர்களின் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தேன். ஆனால், ஜூன் 4-ஆம் தேதி ‘ஆர்ஜே சரண் ஜெயராமன்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சரண்ராஜ் என்பவர் என்னுடைய வீடியோக்களை எடுத்து, தனது பக்கத்தில் பதிவிட்டு என்னை மிகக் கொச்சையான வார்த்தைகளால் உருவக் கேலி (Body Shaming) செய்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தவெக ஆதரவாளர் என்பதால் தன்னைத் தனிப்பட்ட முறையில் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்பேன் என்பது போன்ற ஆபாசமான மற்றும் அச்சுறுத்தும் தொனியில் சரண் ஜெயராமன் வீடியோ வெளியிட்டதாகவும், இது தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அந்தப் பெண் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் கொளத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன் பேரில், பெண்களை ஆபாசமாகச் சித்தரித்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட இரண்டு முக்கியப் பிரிவுகளின் கீழ் கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சரண்ராஜை தாம்பரத்தில் வைத்துத் தற்பொழுது கைது செய்துள்ளனர்.
சரண்ராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து விவாதத்தைக் கிளப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த விவகாரம் தொடர்பாகத் தனக்கு அமைச்சர் சரத் தரப்பில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறி, சரண்ராஜ் தாம்பரம் காவல் நிலையத்திலும், சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்தச் சூழலில், தவெக பெண் நிர்வாகியை இழிவுபடுத்திய வழக்கில் அவர் தற்பொழுது சிக்கிக் கைது செய்யப்பட்டுள்ளது திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பு அரசியல் வட்டாரங்களிலும், சமூக ஊடக உலகிலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.