தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளிக்க முடிவெடுத்து, அதனை கட்சித் தலைமையிடமே நேரடியாகத் தெரிவித்த சம்பவம் அறிவாலய வட்டாரத்தை உலுக்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருக்கும் அசோக் குமார் என்பவரே இந்த அதிரடி முடிவை எடுத்தவர். கடந்த முறை மட்டுமன்றி தற்போதும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், திடீரென எடுத்த இந்த விபரீத முடிவு திமுக மேலிடத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதே தனக்கு பொருளாதார ரீதியாக கடுமையான சங்கடங்கள் ஏற்பட்டதாகவும், தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலும் நிதி நெருக்கடியால் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அசோக் குமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் சொந்த செலவில் கட்சி நிகழ்வுகளைக் கூட நடத்த முடியாத அளவுக்கு சூழ்நிலை மோசமாக உள்ளதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாமல், வெளியில் இருந்து கொண்டு தவெக கட்சிக்கு ஆதரவாக செயல்படப் போவதாக அவர் திமுக தலைமைக்கு தூது அனுப்பியுள்ளார்.
எம்எல்ஏவின் இந்த அதிரடி அறிவிப்பால் அதிர்ந்து போன திமுக தலைமை, உடனடியாக தஞ்சாவூர் எம்பி முரசொலி மற்றும் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் ஆகியோரை நேரில் அனுப்பி அசோக் குமாரை சமாதானப்படுத்த உத்தரவிட்டது. கட்சி நிர்வாகிகள் அசோக் குமாரின் இல்லத்திற்குச் சென்று, அவருக்கு பல்வேறு வாக்குறுதிகளையும் நம்பிக்கையையும் அளித்து ஒருவழியாக சமாதானப் படுத்தினர். இதனைத் தொடர்ந்து, சென்னை வந்த அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து மனம் விட்டுப் பேசியுள்ளார்.
தலைமையின் சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் வழங்கப்பட்ட சில முக்கிய உத்தரவாதங்களின் அடிப்படையில் அசோக் குமார் தனது முடிவை மாற்றிக் கொண்டு திமுகவிலேயே தொடர சம்மதித்துள்ளார். இருப்பினும், அசோக் குமாரின் இதே போன்ற மனநிலையிலும், பொருளாதார நெருக்கடியிலும் இன்னும் பல திமுக எம்எல்ஏக்கள் ரகசியமாக புலம்பி வருவதாகவும், அவர்கள் தவெக-வின் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அறிவாலயத்திற்குள் ஒரு உள்நோக்கு பேச்சு ஓடிக் கொண்டிருப்பது திமுக தலைமைக்கு புதிய குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.