தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO), மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் (MVI) மற்றும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் (Driving Schools) லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் இருந்து ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு அசுர வேகத்தில் லஞ்சம் கைமாறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 44 முக்கிய இடங்களில் இந்தச் சோதனையானது ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த அதிரடி வேட்டை கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் நடத்திய இந்தத் தீவிர சோதனையில், கணக்கில் காட்டப்படாத மொத்தம் 37 லட்சத்து 81 ஆயிரத்து 168 ரூபாய் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அதிகாரிகள் நேரடியாக ரொக்கமாகப் பணம் வாங்குவதைத் தவிர்த்து, இடைத்தரகர்கள் மூலமாக கூகுள் பே (GPay) போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வழியாக லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது. சோதனையில் கணக்கில் வராத ரொக்கப் பணம் 31 லட்சத்து 85 ஆயிரத்து 700 ரூபாயும், ஜிபே மூலமாகப் பெறப்பட்ட லஞ்சப் பணம் 5 லட்சத்து 95 ஆயிரத்து 468 ரூபாயும் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் (Sub-Registrar Offices) இதே போன்ற அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டு, சுமார் 37 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், அரசுத் துறைகளில் நிலவும் முறைகேடுகளைக் களைந்து ஊழலை முழுமையாகக் கட்டுப்படுத்த முதல்வர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி வேட்டைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், லஞ்சப் புழக்கம் அதிகம் உள்ள அரசு நிறுவனங்களில் வரும் நாட்களிலும் இந்தத் திடீர் சோதனைகள் தொடரும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை எச்சரித்துள்ளது.