தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “மீண்டும் என் மீது கேஸ் போட்டு தஞ்சாவூருக்கு அனுப்புவார்களா?” என்று நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பி அரசியல் எதிரிகளை விமர்சித்துப் பேசியுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்துத் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். பிரச்சாரக் கூட்டத்தில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், தமிழக அரசியல் களம் மற்றும் சட்டமன்றத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் பரபரப்பு நிகழ்வுகளைக் குறிப்பிட்டுத் தவெக மற்றும் அதிமுக தலைவர்களின் செயல்பாடுகளை விமர்சித்தார்.
பிரச்சாரத்தில் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் மற்றும் லண்டன் பயணம் குறித்துப் பேசத் தொடங்கியபோது, கூட்டத்தில் இருந்த மக்கள் ஆவேசக் குரல் எழுப்பினர். அப்போது பேச்சைச் சற்று நிறுத்திய உதயநிதி ஸ்டாலின், “மறுபடியும் என் பேச்சைக் காரணம் காட்டி என் மீது கேஸ் போட்டு தஞ்சாவூர் ஜெயிலுக்கு அனுப்புவானா?” என நக்கலாகக் கேள்வி எழுப்பினார். அவரின் இந்த நகைச்சுவையானப் பேச்சு கூட்டத்தில் பெரும் சிரிப்பலையையும் கரவொலியையும் எழுப்பியது.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்ற பின் மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுவதைக் கடுமையாகச் சாடினார். அதிமுக வேட்பாளருக்கு மக்கள் வாக்களித்தால், அவர் மீண்டும் மாற்றுக் கட்சிக்குச் சென்றுவிடுவார் என்றும், அதனால் தாராபுரம் தொகுதிக்கு மீண்டும் ஒரு இடைத்தேர்தல் மட்டுமே மிஞ்சும் என்றும் குற்றம் சாட்டினார். எனவே, தொகுதி வளர்ச்சியை உறுதி செய்யத் திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.