Posted in

ஆசியாவின் முன்னாள் முதப்பணக்காரர் ஹுய் கா யானுக்கு ஆயுள் தண்டனை: சீனா எவர் கிராண்ட் வீழ்ச்சியின் பின்னணி!

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர் கிராண்ட் (Evergrande) குழுமத்தின் நிறுவனரும், ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான ஹுய் கா யானுக்கு (Hui Ka Yan) சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஷென்சென் இடைநிலை மக்கள் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பில், நிதி மோசடி, சட்டவிரோதமாக பொதுமக்களிடம் நிதி திரட்டியது மற்றும் லஞ்சம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவரது அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு சாதாரண பின்னணியில் இருந்து தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய ஹுய் கா யான், குறுகிய காலத்தில் எவர் கிராண்ட் நிறுவனத்தை இந்தியாவின் மற்றும் ஆசியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யமாக மாற்றினார். 2017 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் தரவரிசையின்படி $45 பில்லியனுக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் ஆசியாவின் முதல் பணக்காரராகத் திகழ்ந்தார். இருப்பினும், அதிக அளவிலான கடன் வாங்கி நிலங்களையும் கட்டிடங்களையும் விரிவாக்கம் செய்த இவரது தவறான வணிக உத்தி, இறுதியில் பெரும் நிதி நெருக்கடிக்கு வழிவகுத்தது.

2020 ஆம் ஆண்டில் சீன அரசு கடன் வாங்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தபோது, எவர் கிராண்ட் நிறுவனம் சுமார் $300 பில்லியன் (ரூ. 25 லட்சம் கோடிக்கும் மேல்) கடனில் மூழ்கி தள்ளாடியது. இதன் தொடர்ச்சியாக 2021-இல் கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாமல் போலி நிதியறிக்கைகள் தயாரித்து பல பில்லியன் டாலர் வருவாயை உயர்த்திக் காட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2023 இல் அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்ட ஹுய், நிதி கையாடல் உட்பட 8 முக்கிய குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கில் எவர் கிராண்ட் நிறுவனத்திற்கு சுமார் $1.3 பில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பலருக்கு 6 முதல் 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சீனப் பொருளாதாரத்தையும், உலகின் இரண்டாவது பெரிய ரியல் எஸ்டேட் சந்தையையும் உலுக்கிய இந்த பிரம்மாண்ட நிறுவன வீழ்ச்சி, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது