நெதர்லாந்தின் KLM (KL592) விமானத்தில் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கிப் பயணித்த ஒரு டச்சுப் பெண், விமானத்திலேயே கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பின் மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்தப் பெண் அமர்ந்திருந்த அதே வரிசையில் அல்லது மிக அருகாமையில் அமர்ந்து பயணித்த ஒரு இத்தாலியருக்கு தற்போது ஹண்டா வைரஸிற்கான தீவிர அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இது ‘மூன்றாம் தலைமுறை’ (Generation Three) பரவலாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதாவது, எலிகளிடமிருந்து மனிதருக்குப் பரவாமல், பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதே இந்த அச்சத்திற்குக் காரணம்.
தற்போது இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் (Calabria, Campania, Tuscany மற்றும் Veneto) உள்ள நான்கு பயணிகள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த அந்தப் பெண், முன்னதாக ‘MV Hondius’ என்ற சுற்றுலா கப்பலில் பயணித்தவர் என்பதும், அந்தக் கப்பலில் ஏற்கனவே மூன்று பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக எலிகளின் கழிவுகள் மூலம் பரவும் இந்த வைரஸ், இப்போது ‘ஆண்டிஸ் வைரஸ்’ (Andes virus) என்ற உருமாற்றமடைந்த வீரியத்துடன் மனிதர்களிடையே பரவுகிறதோ என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஹண்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, தசைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும். பின்னர் இது நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறுகளை (HPS) உண்டாக்கி மரணத்திற்கு வழிவகுக்கும். இந்த வைரஸிற்கு தற்போது வரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லை என்பது நிலமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. இத்தாலிய அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO), பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையில் இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “கோவிட்-19 போன்ற ஒரு பெருந்தொற்று மீண்டும் உருவாகாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று இத்தாலிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இத்தாலியரின் மாதிரிகள் தற்போது தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் வைரஸ் உருமாற்றம் உறுதி செய்யப்பட்டால், உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய சுகாதார நெறிமுறைகள் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.