சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர். வீரமணி மீது தொடரப்பட்டுள்ள போக்சோ (POCSO) வழக்கில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது ஓட்டுநர் பெருமாள் என்கிற பாலா கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 14-ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் (SIT) கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமி அளித்த புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் நவம்பர் 13-ஆம் தேதி வீரமணி மீது ஒன்பதாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமிகளை வீரமணியிடம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்குத் துணை போனதாகக் கூறப்படும் பாலா, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்தாவது நபர் ஆவார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். மயிலாப்பூர் வட்டாட்சியர் மற்றும் நிர்வாக நடுவர் முன்னிலையில் நீச்சல் குளம் இருந்த பகுதியில் சுமார் ஆறு மணி நேரம் தோண்டிப் பார்க்கப்பட்ட நிலையில், அங்கு உடல்களோ அல்லது தடயங்களோ எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 13 சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் வீரமணி மீது மொத்தம் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வீரமணி மற்றும் அவருக்கு உதவிய 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவற்றில் ஒரு வழக்கில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விரைவில் நீதிமன்ற விசாரணை தொடங்கவுள்ளது.