லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் கடந்த ஏப்ரல் 29, 2026 அன்று இரண்டு யூதர்களைக் கத்தியால் குத்திய எசா சுலைமான் (Essa Suleiman, 45) மீதான வழக்கு நேற்று (மே 1, 2026) நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, அவர் கோல்டர்ஸ் கிரீன் பகுதிக்குச் செல்வதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பே, தெற்கு லண்டனின் சவுத்வார்க் பகுதியில் தனக்கு 20 ஆண்டுகளாகத் தெரிந்த நண்பரான இஸ்மாயில் உசேன் (Ishmail Hussein) என்பவரை அவரது வீட்டிலேயே வைத்துக் கொல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர் அதிர்ஷ்டவசமாக அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்ற எசா சுலைமான், பின்னர் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் தனது வெறியாட்டத்தைத் தொடர்ந்துள்ளார்.
கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் சினகாக் (Synagogue) எனப்படும் யூத வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே நின்றிருந்த 34 வயதுடைய ஸ்லோய்ம் ராண்ட் (Shloime Rand) என்பவரை முதலில் மார்பில் குத்தியுள்ளார். இதில் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு, அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தனது ‘கிப்பா’ (Kippah) தொப்பியைச் சரிசெய்து கொண்டிருந்த 76 வயது முதியவர் நார்மன் ஷைன் (Norman Shine) என்பவரின் கழுத்தில் குத்தியுள்ளார். ஒரே நாளில் தனது நண்பர் உட்பட மூன்று பேரைக் கொல்ல முயன்ற சுலைமான், பின்னர் காவல்துறையினரால் ‘டேசர்’ (Taser) துப்பாக்கி மூலம் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார்.
எசா சுலைமான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்றும், அவர் சோமாலியாவில் பிறந்து 1990-களில் இங்கிலாந்திற்கு இடம்பெயர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 2020-ஆம் ஆண்டிலேயே தீவிரவாதப் போக்குடையவர்களைக் கண்காணிக்கும் அரசின் ‘பிரிவென்ட்’ (Prevent) திட்டத்தில் இவர் கண்காணிக்கப்பட்டு, பின்னர் அந்த வழக்கு மூடப்பட்டிருந்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோரத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரிட்டன் அரசு அந்நாட்டின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலையை ‘Severe’ (கடுமையானது) என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.
தற்போதைய (மே 2, 2026) நிலவரப்படி, காயமடைந்தவர்களில் 34 வயது இளைஞர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்; 76 வயது முதியவர் இன்னும் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எசா சுலைமான் மீது மூன்று கொலை முயற்சி வழக்குகள் மற்றும் ஆயுதம் வைத்திருந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மே 15-ஆம் தேதி லண்டனின் புகழ்பெற்ற ‘ஓல்ட் பெய்லி’ (Old Bailey) நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. நண்பரைக் கொல்ல முயன்றது முதல் யூதர்களைக் குறிவைத்தது வரை அனைத்தும் திட்டமிட்டச் செயல் எனப் புலனாய்வுத் துறையினர் கருதுகின்றனர்.