மத்திய கிழக்கு பிராந்தியத்தில் (மேற்கு ஆசியா) தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் கச்சா எண்ணெய் வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் இந்தியாவில் தற்போதைக்கு எவ்வித எரிசக்தி அல்லது உரத் தட்டுப்பாடும் (No Immediate Crisis) ஏற்படாது என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஒருவேளை அங்கு நிலவும் போர் போன்ற அசாதாரணச் சூழல் முடிவுக்கு வந்தால், அடுத்த 4 முதல் 5 நாட்களுக்குள் வர்த்தகப் போக்குவரத்து மற்றும் விநியோகம் முழுமையாகச் சகஜ நிலைக்குத் திரும்பும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கப்பல் போக்குவரத்து, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் பெட்ரோலிய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டு, மேற்கு ஆசியப் போரினால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினர். ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள போதிலும், இந்தியாவின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக அவர்கள் நாடாளுமன்றக் குழுவிடம் எடுத்துக் கூறினர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த உரத் தேவையில் 30 சதவீதத்திற்கும் அதிகமான இறக்குமதி ஹார்முஸ் நீரிணைப் பாதையைச் சார்ந்தே இருப்பதால், விவசாயப் பாதிப்புகள் குறித்த கவலைகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், வரவிருக்கும் காரிஃப் (Kharif) பயிர் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான 78 லட்சம் டன் உரத் தேவைக்கு மாறாக, அமெரிக்கா உள்ளிட்ட மாற்றுச் சந்தைகளில் இருந்து ஏற்கனவே 80 லட்சம் டன் உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதேபோல, நாட்டின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய, எண்ணெய் நிறுவனங்களின் இருப்புடன் சேர்த்து 78 நாட்களுக்குத் தேவையான அவசரக்கால எரிசக்தி இருப்பு (Strategic Energy Reserves) பாதுகாப்பாக உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் விவரிக்கப்பட்டது
போர் தீவிரமடைந்தால் சரக்குக் கப்பல்களை மாற்றுப் பாதைகளில் திருப்புவதற்கும், அவசரக்காலக் சரக்கு மேலாண்மைக்கும் இந்தியத் துறைமுகங்கள் முழுவீச்சில் தயார்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய சர்வதேசச் சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கப்பல் காப்பீட்டுக் கட்டணங்கள் அதிகரித்தாலும், பல்துறை அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு உத்திகள் மூலம் இந்தியச் சந்தையில் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாமல் அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் அக்குழுவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.