பிரிட்டனின் சவுதாம்ப்டன் (Southampton) நகரில் பல்கலைக்கழக மாணவர் ஹென்றி நோவாக் (18) என்ற இளைஞரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த வழக்கில், சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்த விக்ரம் திக்வா (23) என்ற இளைஞருக்கு லண்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தச் சூழலில், கொலையாளியான விக்ரம் திக்வாவின் பாட்டி ஊடகங்களுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது பேரன் எப்போதும் ஒரு “பிடிவாதக்கார மற்றும் கடினமான பையன்” (Difficult Boy) என்று குறிப்பிட்ட அவர், கொடூரக் கொலைக்கு அவனது குணமே காரணம் என்பது போல் பேசியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஹென்றி, தனது கால்பந்து அணியினருடன் இரவு நேரக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டுத் தங்குமிடம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது வழியில் விக்ரம் திக்வாவுடன் ஏற்பட்ட திடீர் வாக்குவாதத்தில், விக்ரம் தான் மறைத்து வைத்திருந்த 21 சென்டிமீட்டர் நீளமுள்ள பெரிய கத்தியால் ஹென்றியை 5 முறை கொடூரமாகக் குத்திக் கொலை செய்தார். தான் சீக்கிய மத வழக்கப்படி ‘கிர்பான்’ (Kirpan) என்னும் புனிதக் கத்தியை வைத்திருந்ததாகவும், தற்காப்பிற்காகவே குத்தியதாகவும் விக்ரம் வாதிட்டதை நீதிமன்ற நடுவர் முற்றிலும் நிராகரித்தார்.
இந்தக் கொடூரக் கொலை நடந்த உடனேயே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்ரமின் தாய் கிரண் கவுர் (53), தனது மகன் கொலைக்குப் பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த பெரிய கத்தியை அங்கிருந்து எடுத்துச் சென்று ரகசியமாக மறைத்து வைத்துள்ளார். இந்த குற்றத்திற்காக அவருக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. எனினும், தனது மகளின் இந்தச் செயலை நியாயப்படுத்திப் பேசியுள்ள பாட்டி, “எந்தவொரு தாயும் தனது மகனைக் காப்பாற்றவே நினைப்பாள்; என் மகள் கிரண் கவுர் செய்தது ஒரு தாய்க்கேயான பாதுகாப்பு உணர்வே தவிர, சட்டத்தை ஏமாற்றும் நோக்கம் அதற்கு இல்லை” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளி விக்ரம் திக்வா, ஆரம்பத்தில் போலீசாரிடம் ஹென்றி தம்மைக் சாதிய ரீதியாகத் திட்டித் தனது தலைப்பாகையைக் (Turban) கழற்றி எறிந்ததாகப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் போலீசார் முதலில் காயமடைந்த ஹென்றியையே விலங்கிட்டுத் தவறாகக் கையாண்டனர். தற்போது விக்ரமுக்குக் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொலையாளியின் குடும்பத்தினர் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும் தங்களின் செயல்களை நியாயப்படுத்திப் பேசி வருவது பிரிட்டன் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஹென்றியின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.