Posted in

திட்டமிட்ட அவமதிப்பு: “என்னை இன்சல்ட் பண்ணவே வந்தாங்க”.. சென்னை மேயர் பிரியாவுக்கு தவெக எம்.எல்.ஏ பல்லவி பதிலடி

சென்னை மாநகராட்சிப் பள்ளிப் புதிய கட்டிடத் திறப்பு விழாக்களில் பங்கேற்ற தவெகவின் திரு.வி.க. நகர் தொகுதி பெண் எம்.எல்.ஏ எம்.ஆர்.பல்லவி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திமுகவினர் தன்னைத் திட்டமிட்டு அவமதித்ததாகப் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தமக்குக் குழந்தை பிறந்து 7 நாட்களேயான நிலையிலும், மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மண்டல அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்று மக்கள் நலப் பணிக்காகத் தான் இந்த விழாவில் கலந்து கொண்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பள்ளித் திறப்பு விழாவில் நடந்த உள்கட்சி அதிகார மோதல் குறித்துப் பேசிய எம்.எல்.ஏ பல்லவி, “விழா ஏற்பாட்டின் போது அதிகாரிகள் இருவர் கட் செய்வதற்காக இரண்டு ரிபன்களைத்தான் ரெடி பண்ணி வச்சிருந்தாங்க; ஆனா மேயர் பிரியா மற்றும் திமுகவினர் என்னை வேண்டுமென்றே பின்னாடி தள்ளிவிட்டு, தங்களது ஆட்களை முன்னாடி காட்டணும் அப்படின்ற மோட்டிவோட செயல்பட்டாங்க; ஆக்சுவலி அவங்க நேற்றிரவு வரைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வர பிளானே இல்லை, ஆனா நான் வர்ற நியூஸ் தெரிஞ்சுதான் வேணும்னே என்னை இன்சல்ட் பண்ணனும்ன்ற ஒற்றை நோக்கத்தோடு வாலண்டரியா வந்திருக்காங்க” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்கும் நிகழ்வில் நேர்ந்த அவமதிப்பை விவரித்த அவர், “அங்கிருந்த பெண் உதவி ஆணையர் மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ-விடம் கொடுங்கன்னு சொன்னப்பவும், அவங்க ‘ஆஹா வேண்டாம், ஜோனல் ஆபீசரும் சேர்மனும் கொளுத்தட்டும்’ என்று கூறி தடுத்தாங்க; இது ஒரு பள்ளி நிகழ்ச்சி என்பதால் அங்கப் போயிட்டு நம்ம வீரத்தைக் காட்டக்கூடாதுன்னு நான் சைலண்டா வந்துட்டேன்; அதன் பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பலரும் என்னிடம் வந்து, அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு எங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லி மன்னிப்பு கேட்டாங்க” என்று வீடியோ ஆதாரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இரண்டாவது நிகழ்ச்சியிலும் திமுகவினர் அதேபோல அவசரமாக ரிபனை வெட்டிவிட்டு, பின்னர் மெழுகுவர்த்தியை பல்லவியிடம் கொடுக்க முயன்ற போது, “நீங்களே ஏற்றிவிட்டீர்கள், அதுவே ஓகேதான் பரவாயில்லை” என்று கூறி பல்லவி அதை வாங்க மறுத்து தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த விவகாரம் குறித்துப் பேசிய அவர், மருத்துவர்கள் 3 மாதங்கள் கட்டாய ஓய்வு எடுக்கச் சொல்லியும், 10 நாட்களில் தாம் மீண்டும் மக்கள் பணிகளுக்குத் திரும்பப் போவதாக உறுதியளித்தார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதமே நிறைவடைந்துள்ள சூழலில், திமுக – தவெக இடையே வெடித்துள்ள இந்த மேயர் – எம்.எல்.ஏ மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.