Posted in

மகனைக் காப்பாற்ற கொலைக் கத்தியை மறைத்த தாய்! பிரிட்டனை உலுக்கிய மாணவர் கொலையில் தாய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

பிரிட்டனின் சவுதாம்டன் (Southampton) நகரில் 18 வயது பல்கலைக்கழக மாணவர் ஹென்றி நோவாக் (Henry Nowak) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலைக்கு முனையக் காரணமான ஆயுதத்தை சம்பவ இடத்திலிருந்து அகற்றித் தனது வீட்டில் மறைத்து வைத்த கொலையாளியின் தாய்க்குச் சவுதாம்டன் கிரவுன் நீதிமன்றம் இன்று (ஜூலை 17, 2026) 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிக்குத் துணை நின்றதாக (Assisting an offender) கொலையாளி விக்ரம் திக்வாவின் (Vickrum Digwa) தாயான கிரண் கவுர் (Kiran Kaur – 53) என்பவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி, எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த நிதித்துறை மாணவர் ஹென்றி நோவாக், தனது கால்பந்து அணியினருடன் இரவு நேரக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது 23 வயதான விக்ரம் திக்வாவால் 5 முறை கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ இடத்திற்குப் போலீசார் வருவதற்கு முன்பாகவே அங்கு விரைந்த கிரண் கவுர், தனது மகன் கொலைக்கு உபயோகித்த 21 சென்டிமீட்டர் பிளேடு கொண்ட அந்தப் பெரிய கத்தியைக் கைப்பற்றி, அருகில் இருந்த தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, மகனின் படுக்கையறையில் இருந்த பிற பாரம்பரிய வழிபாட்டு ஆயுதங்களுடன் சேர்த்து மறைத்து வைத்துள்ளார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கொலையாளி விக்ரம் திக்வா தான் எவ்விதத் தவறும் செய்யவில்லை என்றும், இறந்த மாணவர் ஹென்றி தான் தன்னை இழிவாகப் பேசித் தாக்கியதாகப் பொய்களின் சுவரை எழுப்பி அதிகாரிகளைத் திசைதிருப்ப முயன்றுள்ளார். சம்பவ இடத்தில் முக்கிய ஆதாரமான கத்தி இல்லாததால், ஆரம்பத்தில் போலீசார் கொலையாளியின் பொய் மூட்டைகளை நம்பும் சூழல் ஏற்பட்டது. இதனால் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவர் ஹென்றி, காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்ட நிலையிலேயே அனாதையாக, பயத்துடன் உயிரிழக்க நேரிட்டது; இதற்குத் தாயின் இந்த ஆதார அழிப்புச் செயலே முக்கியக் காரணம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நிகோலஸ் லோபென்பெர்க் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம் மௌஸ்லி கேசி (Judge William Mousley KC) தீர்ப்பின் போது, “ஒரு பொறுப்பான பெற்றோர் தன் மகன் தவறு செய்திருந்தால் அவனைக் கண்டித்து, உண்மையை ஒப்புக்கொள்ளச் செய்திருக்க வேண்டும்; ஆனால் நீங்களோ கொலைக்கு உடைந்தையாக இருந்து ஆயுதத்தை மறைத்துள்ளீர்கள்” என்று கிரண் கவுரைக் கடுமையாகச் சாடினார். சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் அந்தக் கொலைக் கதி போலீசாரால் மீட்கப்பட்டது. முன்னதாக, கொலைக் குற்றவாளியான விக்ரம் திக்வாவுக்குக் கடந்த ஜூன் மாதம் 21 ஆண்டுகள் குறைந்தபட்ச சிறைத் தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவனது தாயும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது இந்த வழக்கில் மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *