Posted in

மாணவர்களை துப்பாக்கியால் சுட வந்த இளைஞர்- சூடு வாங்கிக் கொண்டு மற்றவர்களை காப்பாற்றிய பிரின்சிப்பால் !

📅 வெளியானது: April 15, 2026

ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள பால்ஸ் வேலி உயர்நிலைப் பள்ளியில், மரணத்தின் பிடியில் இருந்த மாணவர்களைக் காப்பாற்ற தனது உயிரையே துச்சமென மதித்த தலைமை ஆசிரியர் கிர்க் மூரின் (Kirk Moore) வீரச் செயல் ஒட்டுமொத்த உலகையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் 7-ஆம் தேதி காலை, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த 20 வயது விக்டர் லீ ஹாக்கின்ஸ் என்ற இளைஞன், அங்கிருந்த மாணவர்களை தரையில் படுக்கும்படி மிரட்டியுள்ளான். ஒரு மாணவனை நோக்கி அவன் சுட முயன்றபோது துப்பாக்கி இயங்கவில்லை, ஆனால் அடுத்த நொடியே அதைச் சரிசெய்து மற்றொரு மாணவனை நோக்கி சுட்டபோது நல்வாய்ப்பாக அந்த மாணவன் உயிர் தப்பினான். மரண பயத்தில் மாணவர்கள் கதறி அழுத அந்தத் தருணம், அப்பள்ளியின் வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாக மாறவிருந்தது.

ஆனால், அந்த மரணப் பயத்திற்கு மத்தியில் ஒரு மீட்பராக உருவெடுத்தார் தலைமை ஆசிரியர் கிர்க் மூர். தனது அலுவலக அறையிலிருந்து மின்னல் வேகத்தில் வெளியே வந்த அவர், எவ்வித அச்சமுமின்றி துப்பாக்கி ஏந்திய அந்த இளைஞன் மீது பாய்ந்து அவனை கீழே தள்ளி மடக்கினார். ஒருபுறம் மரண அச்சுறுத்தல், மறுபுறம் பிஞ்சுயிர்களைக் காக்க வேண்டிய கடமை எனப் போராடிய அவர், துப்பாக்கிதாரியை ஒரு இருக்கையில் வைத்து அழுத்திப் பிடித்து அவனது கையில் இருந்த ஆயுதத்தைப் பறிக்க முயன்றார். இந்த ஆவேசமான போராட்டத்தின்போது, துப்பாக்கிதாரியின் விரல்கள் தூக்கியதில் கிர்க் மூரின் காலில் குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டது. இருப்பினும், காயத்தைப் பொருட்படுத்தாமல் அவர் காட்டிய உறுதி, அந்த இளைஞனை நிலைகுலையச் செய்தது.

சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே பாதுகாப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் காண்போரை நிலைகுலைய வைக்கின்றன. ரத்தம் வழிய வழிய அவர் துப்பாக்கிதாரியைப் பிடித்து வைத்திருந்தபோது, மற்ற பள்ளி ஊழியர்கள் ஓடி வந்து துப்பாக்கியை அப்புறப்படுத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிர்க் மூர், தற்போது நலமுடன் மீண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “தன்னலம் பார்க்காமல் ஒரு தந்தை உள்ளத்தோடு அவர் செயல்பட்ட விதம், இன்று பல வீடுகளில் விளக்கு அணையாமல் தடுத்திருக்கிறது” என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

விசாரணையில், கைதான ஹாக்கின்ஸ் அதே பள்ளியின் முன்னாள் மாணவன் என்பதும், தலைமை ஆசிரியர் மீது இருந்த தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதும் தெரியவந்தது. ஆனால், அந்த வெறுப்பை தனது அளவற்ற அன்பாலும் வீரத்தாலும் முறியடித்துள்ளார் கிர்க் மூர். ஒரு கல்விக்கூடத்தை ரத்தக் களரியாக மாற்ற நினைத்த ஒருவனின் திட்டத்தை, தனது உடல் உறுப்பைத் தியாகம் செய்து தடுத்து நிறுத்திய இந்த “நிஜ ஹீரோ” சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார். ஒரு ஆசிரியராக மட்டுமின்றி, ஒரு பாதுகாவலனாக அவர் நின்ற விதம் மனிதநேயத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது.