Posted in

உயிருடன் திரும்புவேனா என இம்ரான் கான் வருத்தம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியால சிறையில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறைச்சாலையில் தனக்கு ஏற்பட்டுள்ள கடுமையான உடல்நல பாதிப்புகள் குறித்து அவர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சிறையில் தனக்குத் தேவையான தகுந்த மருத்துவப் பரிசோதனைகளையும் உரிய சிகிச்சைகளையும் பெறச் சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதாக அவர் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதைக் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதைய சூழலில் தான் சிறையிலிருந்து உயிருடன் வெளியே திரும்புவேனா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமருக்குச் சிறையில் உரிய மருத்துவ வசதிகள் மறுக்கப்படுவதாக வெளிவரும் தகவல்கள் அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனக்குத் திட்டமிட்டு சிகிச்சைகள் தாமதப்படுத்தப்படுவதாக அவரது தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து கவலைக்கிடமாக மாறிவரும் இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவர் எழுதியுள்ள கடிதம் குறித்து பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அவருக்கு விரைவில் முறையான மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்படுமா என்பது குறித்து உலக நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.