ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் அமைந்துள்ள ஈரானின் லாரக் தீவு (Larak Island) மீது அமெரிக்கப் படைகள் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இயங்கி வரும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் கடுமையான பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரு மாத கால தற்காலிக அமைதிக்குப் பிறகு மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் உலகளாவிய ரீதியில் கடும் பதற்றம் நிலவுகிறது.
முன்னதாக, கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கு அச்சுறுத்தலாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) கடல் கண்ணிவெடிகளை வீசத் தயாராக இருந்ததாகக் கூறி, லாரக் தீவில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததை அடுத்து, ஈரான் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி இந்த உடனடிப் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது.
ஈரானிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, லாரக் தீவு மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஜோர்டானின் ‘கிங் ஹுசைன்’ மற்றும் ‘அல்-அஸ்ரக்’ ஆகிய அமெரிக்க ராணுவப் விமானத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டன. அதேபோன்று, அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் படைகள் முகாமிட்டுள்ள அமீரகத்தின் ‘அல்-மின்ஹாத்’ (Al Minhad) வான்படைத் தளத்தைக் குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் பிராந்திய நாடுகளுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், தாங்கள் போரை விரும்பவில்லை என்றும், ஆனால் தங்களின் இறையாண்மை மீறப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். தொடர் மோதல்களால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.