Posted in

காவல்துறையினர் மீது கார் மோதல்: ஈரானில் போராட்டக்காரருக்கு மரண தண்டனை!

ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது காவல்துறையினர் மீது காரை மோதித் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷஹ்ராம் சாதேகி என்ற நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய நீதித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெஹ்ரானுக்கு மேற்கே உள்ள கரஜ் நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறையினர் மீது ஷஹ்ராம் சாதேகி காரை மோதியதில் 7 காவலர்கள் பலத்த காயமடைந்தனர் என்றும், அதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஈரானின் மிசான் ஆன்லைன் (Mizan Online) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து அவர் தனது காரைக் கொளுத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகக் காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணையின் முடிவில், கரஜ் புரட்சிகர நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்ததுடன், அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரானில் விலைவாசி உயர்வைக் கண்டித்துத் தொடங்கி பின்னர் அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டமாக உருவெடுத்த இந்த நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.