Posted in

ஓமன் வளைகுடாவில் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு: ஈரான் முற்றுகையை மீறியதால் நடவடிக்கை!

ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை விதியை மீறிச் செல்ல முயன்ற ‘எம்.வி ஹூடா’ (M/V Huda) என்ற செயிண்ட் கிட்ஸ் கொடி பொருத்திய வணிகச் சரக்குக் கப்பலை அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தாக்கி முடக்கியுள்ளது. ஈரான் துறைமுகத்திற்குச் சென்றுவிட்டு அப்பகுதியை விட்டு வெளியேற முயன்ற இக்கப்பல், அமெரிக்க ராணுவத்தின் தொடர் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் போர் விமானம் மூலம் வீசப்பட்ட துல்லியமான ஏவுகணைகள் கப்பலின் பின்பகுதியைத் தாக்கி அதன் இயக்கத்தை நிறுத்தியுள்ளன.

ஈரான் மீதான பொருளாதார மற்றும் ராணுவ முற்றுகையை அமெரிக்கா கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவத்தில் கப்பலின் மாலுமிகள் முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டதாகவும், பின்னர் ஐக்கிய அரபு அமீரகக் கடலோரக் காவல் படையினரால் 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் இதுவரை முற்றுகையை மீற முயன்ற 147 கப்பல்களை அமெரிக்கப் படைகள் திசைதிருப்பி அனுப்பியுள்ளன.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஓமன் வளைகுடா மற்றும் ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானிய ராணுவமும் அப்பகுதியில் கப்பல்கள் மீது எதிர்த்தாக்குதல்களை நடத்தி வருவதாகக் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதையில் நிலவும் இந்த மோதல் போக்கு உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

தற்போது சேதமடைந்த சரக்குக் கப்பல் ஓமன் வளைகுடா கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு அமெரிக்க கடற்படையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் ரோந்துப் பணிகளை அமெரிக்க ராணுவம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.