Posted in

மீண்டும் ஒரு அக். 7 பாணி பேரழிவுத் தாக்குதல்?  ஈரானின் ரகசியத் திட்டம் அம்பலம்!

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய கொடூரத் தாக்குதலைப் போல, ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்து இஸ்ரேலைத் தாக்கும் பிரம்மாண்ட ராணுவத் திட்டத்தை ஈரான் தனது நட்பு அமைப்புகளுடன் சேர்ந்து வகுத்து வருவதாகப் புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளது மத்திய கிழக்கில் மீண்டும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஜெருசலேம் போஸ்ட் மற்றும் அரபு ஊடகங்கள் வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கைகளின்படி, லெபனானின் ஹெஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப் படைகளை ஒரே அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து, இஸ்ரேலுக்கு எதிராகப் ஒரே நேரத்தில் பலமுனைத் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எதிர்ப்பு அச்சு’ (Axis of Resistance) என அழைக்கப்படும் தனது நட்பு அமைப்புகளின் கூட்டமைப்பை ஈரான் மீண்டும் பலப்படுத்தி வருவதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் (IDF) உறுதி செய்துள்ளன.

கடந்த 2023 அக். 7 தாக்குதலின் போது ஹமாஸ் அமைப்பு தன்னிச்சையாகச் செயல்பட்டதால், ஹெஸ்புல்லா உள்ளிட்ட பிற படைகள் முழுவீச்சில் உடனடியாகப் போரில் குதிக்க முடியவில்லை. இந்தத் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ள ஈரானின் குட்ஸ் படை (Quds Force) தளபதிகள், தங்கள் எல்லைப் பிராந்தியப் படைகளுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தி, போரின் தொடக்கத்திலேயே அனைத்து முனைகளிலிருந்தும் இஸ்ரேலைச் சூழ்ந்துத் தாக்கும் வகையில் அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கலீல் அல்-ஹய்யா (Khalil al-Hayya) ஈரானுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் இருந்து இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க தூதர்களின் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு மத்தியிலும், ஈரான் தலைமையிலான இந்த புதிய பேரழிவுத் திட்டப் தகவல்கள் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளை உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் வைத்திருக்க வழிவகுத்துள்ளது.