Posted in

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி ஊர்வலம்: 1989-ல் நிகழ்ந்த வரலாற்றுப் பேராபத்து மீண்டும் நிகழுமா?

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆறு நாள் இறுதிச் சடங்கு ஊர்வலங்கள் தற்போது ஈரானில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. போர்ச் சூழல் மற்றும் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தங்களுக்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்ட இந்த இறுதி ஊர்வலம், தற்போதைய புதிய உச்ச தலைவரான அவரது மகன் மொஜ்தாபா கமேனியின் தலைமையில் ஈரானின் பலத்தையும் ஒற்றுமையையும் உலகிற்கு பறைசாற்றும் நோக்குடன் திட்டமிடப்பட்டுள்ளது. தெஹ்ரான், கோம் மற்றும் ஈராக்கின் நஜாஃப், கர்பலா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாகச் சென்று, இறுதியாக மஷாத் நகரில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இந்த நிகழ்வில், சுமார் 1.2 கோடி முதல் 3 கோடி மக்கள் வரை பங்கெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்தைக் கையாள்வதில் ஈரான் அரசுக்கு பெரும் சவாலும், அச்சமும் நீடித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், ஈரானின் வரலாற்றில் இதற்கு முன்பு நடைபெற்ற நாட்டின் முதல் உச்ச தலைவர் அயதுல்லா ருஹொல்லா கொமேனியின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தறிகெட்ட குழப்பமும், பேரழிவும் ஆகும். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொமேனி காலமான போது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஈரானின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தெஹ்ரான் வீதிகளில் திரண்டனர்.

அன்று கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்ட லட்சக்கணக்கான மக்கள், தங்களின் ஆன்மீகத் தலைவரைப் பிரிந்த சோகத்தில் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு கதறி அழுதனர். ஒருகட்டத்தில், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, கொமேனியின் உடல் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டி உடைந்தது. கூட்டத்தினர் அவரது உடலைச் சுற்றியிருந்த புனிதத் துணியை (Shroud) நினைவாக எடுத்துக்கொள்வதற்காகப் பிய்த்து எறிந்ததால், கொமேனியின் உடல் காஃபினில் இருந்து வெளியே சரிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்புப் படையினர் கூட்டத்தைக் கலைக்க வானத்தை நோக்கிச் சுட்ட போதிலும் நிலைமை கைமீறிப் போனதால், இறுதியாக ஹெலிகாப்டர் மூலம் அவரது உடல் மீட்கப்பட்டு, பின்னர் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. அந்த வரலாற்றுச் சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 11,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அந்த கசப்பான வரலாற்றுப் பிழையும் குழப்பமும் தற்போதைய அலி கமேனியின் இறுதி ஊர்வலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஈரானிய பாதுகாப்புப் படையினர் அதீத கவனம் செலுத்தி வருகின்றனர். 2020-ல் நடந்த காசிம் சுலைமானியின் இறுதிச் சடங்கிலும் நெரிசல் ஏற்பட்டு பலர் பலியானது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த முறை தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா பள்ளிவாசலில் கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள மேடையைச் சுற்றி கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மக்கள் 20 நிமிடங்களுக்கு மேல் நிற்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான கோடை வெப்பத்தைத் தணிக்க பிரத்யேக குளிர்விப்பான்கள் (Cooling systems) மற்றும் தண்ணீர் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டு, ராணுவ ஹெலிகாப்டர் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *