Posted in

தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமியின் இன்ஸ்டா பதிவு; ஜோதிடரைத் தொடர்ந்து முதல்வர் விஜய் ஆட்சியில் அடுத்த சர்ச்சை!

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது தனிச் செயலாளராகப் (Private Secretary) பழனிசாமி என்பவரது மகன் ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய்யின் நீண்டகால மேனேஜராகவும், தவெக-வின் முக்கிய நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த ஜெகதீஷ் பழனிசாமிக்கு, முதலமைச்சர் தனக்குள்ள தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அரசியல் நியமனத்தை (Political Appointment) வழங்கியுள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் தனிச் செயலாளராக தினேஷ் என்பவர் நியமிக்கப்பட்ட அதே அரசியல் நடைமுறையின் அடிப்படையில் இந்த முக்கியப் பொறுப்பு ஜெகதீஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தனிச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீஷ் பழனிசாமி, முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டுத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நெகிழ்ச்சியான வாழ்த்துப் பதிவுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், “18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீவிர ரசிகனாக உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வரிசையில் தவம் கிடந்தேன். இன்று தலைமைச் செயலகத்தில் உங்களுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளேன். என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் இது. ஹாப்பி பர்த்டே டூ மை காட் (Happy Birthday to my God)” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, கோட்டையில் முதல்வருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அரசு நிர்வாகத்தின் மிக உயர்ந்த மற்றும் பொறுப்பான பதவியான முதலமைச்சரின் தனிச் செயலாளர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, முதலமைச்சரை ‘எனது கடவுள்’ என்று ஜெகதீஷ் பழனிசாமி குறிப்பிட்டிருப்பதுதான் தற்போதைய சர்ச்சைக்கு மிக முக்கியக் காரணமாக மாறியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் உயர்பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் தனிப்பட்ட விசுவாசத்தை வெளிப்படுத்தினாலும், கோட்டைக்குள் இருக்கும் அதிகாரப்பூர்வப் பதவியைப் பயன்படுத்திக் கடவுள் பிம்பங்களை உருவாக்குவது ஜனநாய நெறிமுறைகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. மேலும், இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஏற்கனவே அண்மையில் தவெக அரசு தனது ஆஸ்தான ஜோதிடர் ஒருவருக்கு முக்கிய அரசுப் பதவி வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தனிச் செயலாளரின் இந்த ‘கடவுள் வாழ்த்து’ பதிவு அடுத்த சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. எனினும், சினிமா மேனேஜராகத் தொடங்கி இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் காருக்குள்ளேயே பயணிக்கும் அளவிற்கு ஜெகதீஷ் பழனிசாமி வளர்ந்துள்ள விதம், தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு உத்வேகமாகப் பார்க்கப்பட்டாலும், நிர்வாக ரீதியாக இது விமர்சனக் கணைகளைச் சந்தித்து வருகிறது.