சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஒரு ரகசிய வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சி, யாரோ ஒருவரால் திருட்டுத்தனமாகப் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது வைரலானதைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்த விவகாரத்தில் தற்போது மிகத் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
லீக் செய்யப்பட்ட இந்த வீடியோவைத் தனது தளத்தில் பகிரும் அல்லது மறுபதிவு செய்யும் சமூக வலைதளக் கணக்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அவர்களின் ஆன்டி-பைரசி (Anti-piracy) குழுவினர் இணையத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், விதிகளை மீறுபவர்களின் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இதுபோன்ற வீடியோக்களைப் பகிர வேண்டாம் என்றும், படத்தின் ரகசியத்தைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறும் தயாரிப்பு நிறுவனம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் விநாயகா ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். மேலும், இந்தப் பாகத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஜதின் சர்னா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இத்தகைய லீக் சம்பவங்கள் படக்குழுவினரை வருத்தமடையச் செய்துள்ளது.
ஏற்கனவே ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் புகைப்படங்கள் லீக் ஆன நிலையில், இப்போது ‘ஜெயிலர் 2’ வீடியோவும் கசிந்திருப்பது தமிழ் சினிமாவில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும், இதுபோன்ற லீக் சம்பவங்களைத் தடுக்கத் தொழில்நுட்ப ரீதியாகப் பல அதிரடி மாற்றங்களைச் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜூன் 12, 2026 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘ஜெயிலர் 2’, ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனின் அதிரடி வேட்டையுடன் மீண்டும் திரையரங்குகளை அதிரவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.