Posted in

திரு-நங்கைகளை மதித்து விஜய் கொடுத்த மரியாதை- பேசு பொருளாக மாறுகிறது !

📅 வெளியானது: April 17, 2026 | இற்றைப்படுத்தப்பட்டது: April 16, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று(16) சென்னையில் வெளியிட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிக்கையின் முதல் பிரதிகளை, சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களைக் கௌரவிக்கும் விதமாக விஜய் வழங்கினார். குறிப்பாக ஒரு விவசாயி, மீனவர், நெசவாளர், ஆசிரியர் மற்றும் ஒரு திருநங்கை ஆகியோரை மேடைக்கு அழைத்து அவர்களுக்கு தேர்தல் அறிக்கையை வழங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தியாவில் திருநங்கைகள் இன்னும் பல இடங்களில் புறக்கணிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் விஜய் செயல்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையில் ‘மகளிர் மற்றும் மாணவர்களுக்கு’ பல அதிரடி அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை, ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவியாக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க, அவர்களது தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ₹15,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தாய்மார்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உயர்கல்விக்காக ₹20 லட்சம் வரை கடனுதவி மற்றும் மாணவர்களுக்கு 500 காமராஜர் உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் விஜய் உறுதியளித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனுக்காகப் பல முக்கியத் திட்டங்களை விஜய் முன்மொழிந்துள்ளார். 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ₹3,500 மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ₹4,500 குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு ஏற்கனவே உள்ள உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதோடு, அவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் மேனிஃபெஸ்டோவில் கூறப்பட்டுள்ளது.

நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய விஜய், தமிழகத்தில் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்குவதே தனது நோக்கம் என்றார். “நாங்கள் எங்களால் முடிந்ததை மட்டுமே வாக்குறுதியாக அளித்துள்ளோம்” என்று குறிப்பிட்ட அவர், ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களை ஏமாற்றி வருவதாகக் கடுமையாகச் சாடினார். அட்மின் வசதிக்காக ‘ஏஐ சிட்டி’ (AI City) மற்றும் ‘ஏஐ பல்கலைக்கழகம்’ அமைக்கப்படும் என்ற நவீன அறிவிப்புகளுடன், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ₹4,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். விஜய்யின் இந்தத் தேர்தல் அறிக்கை திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.