ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மை வணிக மையமான துபாயின் புகழ்பெற்ற ஜெபல் அலி (Jebel Ali) துறைமுகப் பகுதியில் நள்ளிரவில் அடுத்தடுத்துப் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவியது. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றின் கொள்கலனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தே இந்த பயங்கர வெடிப்புகளுக்குக் காரணம் எனத் துபாய் சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
வெடிப்புச் சத்தம் பல கிலோமீட்டர் சுற்றளவுக்குக் கேட்டதுடன், நகரின் பல இடங்களில் கட்டிடங்கள் மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துபாய் சிவில் பாதுகாப்புத் துறையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டுக் குழுவினர், தீவிரமாகப் போராடி தீ பரவாமல் தடுத்து நிலமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
எளிதில் தீப்பற்றக்கூடிய வேதிப்பொருட்கள் மற்றும் எரியக்கூடிய பொருட்கள் அடங்கிய கொள்கலனில் ஏற்பட்ட உராய்வு அல்லது வெப்பம் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் உயிர்ச்சேதமோ அல்லது யாருக்கும் பெரிய அளவிலான காயங்களோ ஏற்படவில்லை எனத் துபாய் ஊடக அலுவலகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
உலகின் மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றான ஜெபல் அலி துறைமுகத்தின் செயல்பாடுகள் இந்த விபத்தால் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், தீ முற்றிலும் அணைக்கப்பட்டுப் பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின் இயல்பு நிலை விரைவாகத் திரும்பியது. இந்த விபத்தின் துல்லியமான காரணத்தைக் கண்டறிய துறைமுக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து உயர்மட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.