Posted in

பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி! சபாநாயகர் செய்த செயல்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மை நிதிநில அறிக்கையைத்  தாக்கல் செய்து பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர், முதல்வர் விஜய்யின் உடை அலங்காரம் மற்றும் நிர்வாகத் திறனை ஒப்பிட்டுப் புகழுரை சூட்டிய சம்பவம் பேரவையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி, ஊழலை அகற்றி, மக்களாட்சியைப் பிடித்து நிற்கும் ‘கோட் சூட்’ போட்ட விவசாயி நீங்கள்” என அமைச்சர் வாசித்த புகழுரை அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
அமைச்சரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வில் துறை சார்ந்த திட்டங்களை விடுத்து முதலமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் புகழாரம் சூட்டுவது அவையின் மரபுகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடனடி எதிர்ப்பு தெரிவித்தனர். பட்ஜெட் உரையின் போது இதுபோன்ற புகழுரைகளைத் தவிர்த்து, விவசாயிகள் சார்ந்த திட்டங்களை மட்டும் வாசிக்குமாறு எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியதால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் காரசாரமான விவாதம் நிலவியது.
எதிர்க்கட்சிகளின் தொடர் கூச்சலைத் தொடர்ந்து களமிறங்கிய பேரவைத் தலைவர் (சபாநாயகர்), பட்ஜெட் உரையின் போது மாண்புமிகு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அவையின் நேரத்தைக் கருத்தில் கொண்டு, பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை மட்டும் வாசிக்குமாறு அறிவுறுத்தினார். அவையின் மரபைக் காக்கும் வகையில் உரையைத் தொடருமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அமைச்சர் மீண்டும் தனது வேளாண் திட்டங்கள் குறித்த உரையைத் தொடர்ந்து வாசித்தார்.
பதவியேற்றது முதல் வழக்கமான வேட்டி சட்டைக்குப் பதிலாகக் கருப்பு ‘கோட்-சூட்’ உடை அணிந்து தலைமைச் செயலகம் மற்றும் அரசு நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் முதல்வர் விஜய்யின் இந்த உடை மாற்றம் ஏற்கனவே விவாதப் பொருளாகியிருந்தது. இந்நிலையில், சட்டமன்றத்தில் அமைச்சரே அவரை “கோட் சூட் அணிந்த விவசாயி” எனக் குறிப்பிட்டுப் பேசியது சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசியல் களம் முழுவதும் காரசாரமான விவாதங்களை உருவாக்கியுள்ளது.